குறுகிய சிந்தனையுடன் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் குறுகிய சிந்தனையுடன் செயல்படுவதாக தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். 


இந்திய தேர்தல் ஆணையம் குறுகிய சிந்தனையுடன் செயல்படுவதாக தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 4 ஆண்டுகளாக தில்லியில் கோடை விடுமுறை முகாம்களை தில்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம். இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் கவனம் அளித்து வருகின்றனர்.  இதனால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த முகாம்களில் அதிகளவில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த முகாம் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக ரேடியோ, பத்திரிகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறோம். தில்லி அரசுப் பள்ளிகளில்  பிற மாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கணிசமான அளவு கல்வி கற்கின்றனர்.  இவர்கள் கோடை விடுமுறைக் காலத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். ஊருக்குச் செல்லாமல் இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பெற்றோரைக் கேட்டுக் கொள்வதற்கு இந்த விளம்பரங்கள் மிக மிக அவசியமாகும். 
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தில்லி கல்வி இயக்குநரகம் அனுமதி கேட்டது. ஆனால்,  தேர்தல் ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இந்த விளம்பரங்களில் ஆம் ஆத்மி அரசு தொடர்பாக எவ்வித வாசகமும் இடம் பெறவில்லை. கல்வி அமைச்சரான எனது புகைப்படம் கூட இடம் பெறவில்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறுகிய சிந்தனையுடன் செயற்படுவது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com