பாஜகவுக்கு மறைமுக ஆதரவளிக்கிறது காங்கிரஸ்!: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லிப் பொறுப்பாளர் கோபால் ராய்,  தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
தில்லி, ஹரியாணா மாநிலம், சண்டீகர் ஆகியவற்றில் மொத்தம் 18 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.  ஆனால், தில்லியில் உள்ள 7 இடங்களில் மட்டுமே கூட்டணி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். 
எஞ்சியுள்ள  11 தொகுதிகளில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க ஒப்புக் கொள்ளாமல் இருப்பதன் மூலம், அத்தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக அவர் ஆதரவு தருகிறார்.
 இந்த 18 இடங்களில் ஓர்  இடத்தில்கூட பாஜக வெற்றி பெறக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் இந்த மாநிலங்களிலும் கூட்டணி வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும் தில்லி துணைமுதல்வருமான மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங்கை நியமித்துள்ளோம். 
அதேபோல, காங்கிரஸ் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கையில் முடிவு' 
தில்லியில் மட்டுமே கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். இது தொடர்பாக ஆம் ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. தில்லியிலும் கூட்டணி அமைக்க தில்லி காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால், தில்லியில் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதுடன்,  ஆம் ஆத்மி கேட்ட 4 தொகுதிகளையும் ஒதுக்கவும் அவர் ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால், ஹரியாணாவில் 4 தொகுதிகள், பஞ்சாபில் 5 தொகுதிகள் கேட்டு ஆம் ஆத்மிதான் பேச்சுவார்த்தையைக் குழப்பியது.  தில்லியில் மட்டும்தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். நேரம் குறைந்து வருவதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். அவர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com