மக்கள் பணியாற்றாத மகேஷ் கிரி

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கடந்த 5 ஆண்டுகளில் சரியான முறையில் மக்கள் பணியாற்றவில்லை என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ள


கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கடந்த 5 ஆண்டுகளில் சரியான முறையில் மக்கள் பணியாற்றவில்லை என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. 
தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பான ரிப்போர்ட் கார்டை ஆம் ஆத்மிக் கட்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகேஷ் கிரியின் ரிப்போர்ட் கார்டை ஆம் ஆத்மியின் தில்லிப் பொறுப்பாளர் கோபால் ராய், அக்கட்சியின் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அதிஷி ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினராக மகேஷ் கிரி இருந்து வருகிறார். ஆனால், குறிப்பிடத்தக்க அளவு மக்கள் பணிகளை அவர் ஆற்றவில்லை. தேர்தல் வாக்குறுதியாக கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகியவை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.  கிழக்கு தில்லியில் பல புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவற்றை  அவர் நிறைவேற்றவில்லை.
கிழக்கு தில்லியில் கீதா காலனியில்  பல்நோக்கு மருத்துவமனை அமைக்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் எடுத்த முயற்சிக்கு மகேஷ் கிரி ஒத்துழைப்பு வழங்கவில்லை. டிடிஏ ஆளுகையின் கீழ் உள்ள  தெருக்களுக்கு மின்விளக்கு வசதி அளிக்கப்படவில்லை. இதனால், மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய  நிலை உள்ளது.  மேலும், கிழக்கு தில்லியில்  பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தொகுதியில் சட்டம்,  ஒழுங்குப் பிரச்னை  உள்ளது. திரிலோக்புரி, கல்யாண்புரி ஆகிய இடங்களில் போதைப்பொருள் விற்பனை அதிகளவில் உள்ளது. வசுந்தரா என்களேவ், மயூரிவிஹார், கீதா காலனி உள்ளிட்ட இடங்களில் சங்கிலித் திருட்டுகள் அதிகமாக உள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com