தில்லியில் 2-ஆவது நாளாக இனிதான வானிலை

தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் (என்சிஆர்) செவ்வாய்க்கிழமை வீசிய காற்று,  புதன்கிழமையும் நீடித்தது. இதனால், குளுமையான சூழல் நிலவியது. 

தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் (என்சிஆர்) செவ்வாய்க்கிழமை வீசிய காற்று,  புதன்கிழமையும் நீடித்தது. இதனால், குளுமையான சூழல் நிலவியது. 
தில்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோடைக் காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகலில் அனல் காற்று வீசி வந்தது. புழுக்கத்தால் தில்லிவாசிகள் அவதியுற்று வந்தனர். 
இந்நிலையில், செயற்கைக்கோள் தகவல், வானிலை பகுப்பாய்வு தகவலின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து உருவாகும் காற்றழுத்தம் காரணமாக தில்லி, என்சிஆர் பகுதிகளில் செவ்வாய்,  புதன் ஆகிய  இரு நாள்களிலும் வானிலையில் மாற்றம் ஏற்படுத்தும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது. 
அதன்படி, செவ்வாய்க்கிழமை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் பல இடங்களிலும் தூறல் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில்,  புதன்கிழமையும் இந்த சீதோஷ்ண நிலை நீடித்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
குளிர்ந்த தட்பவெப்பநிலை இருந்தது. மாலையில் பலத்த காற்றும், மழைத் தூறலும் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. 
காலை 8.30 மணிக்கு காற்றில் ஈரப்பதத்தின் அளவு 65 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 64 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. 24 மணி நேரத்தில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
புதன்கிழமை காலை 8.30 மணி வரையில், பாலம் பகுதியில் 1.8 மி.மீ., லோதியில் 1.4 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 0.2 மி.மீ., அயாநகரில் 2.5 மி.மீ. மழை பதிவானது. 
அதே இடங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரையில் முறையே 0.8 மி.மீ., 1.4 மி.மீ., 0.8 மி.மீ., 0.2 மி.மீ. மழை பதிவானது. 
முன்னறிவிப்பு: வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், மிதமான மழையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com