முறைகேடுகளைத் தவிர்க்க தேர்தல் சீர்சிருத்தம் தேவை

முறைகேடுகளைத் தவிர்க்க தேர்தல் சீர்சிருத்தம் மேற்கொள்வது தேவையாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

முறைகேடுகளைத் தவிர்க்க தேர்தல் சீர்சிருத்தம் மேற்கொள்வது தேவையாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார். 
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. 
இவை இரண்டும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. பணப் பட்டுவாடா தேர்தல் களத்தில் மிகுந்த பாதிப்பை உருவாக்கி வருகிறது. 
தேர்தலில் பண ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்பது தமிழகத்துக்கான பிரச்னை மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மிகவும் பலன் அடைந்த ஓரே கட்சி பாஜகதான். அக்கட்சிக்குத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் நிதி வழங்கியுள்ளன. 
இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருமான வரித் துறையினரின் சோதனைகள், அரசியல் உள்நோக்கத்துடனும், ஒரு தலைப்பட்சமாகவும் சில குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோரின் வீடுகளில் மட்டும் நடத்தப்படுபவையாக உள்ளன. 
உதாரணமாக கனிமொழி தங்கியிருந்த தூத்துக்குடி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வருமான வரித் துறையினரின் சோதனையைக் குறிப்பிடலாம். இந்தச் சோதனையில் எதுவும் கண்டுப்பிடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் குறித்து பல புகார்கள் கூறப்படுகின்றன. 
வேலூர் மக்களவைத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 
தேர்தல் விதிகளை மீறியதாக மாயாவதி உள்ளிட்டோருக்கு பிரசாரம் மேற்கொள்ளத் தடை விதித்திருந்தாலும், உண்மையாகவே தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க விகிதாசார முறை, தேர்தல் செலவை அரசே ஏற்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்போது தேவையாகிறது என்றார் டி. ராஜா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com