கொண்டாட்டத்துக்காக துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் காயம்
By DIN | Published On : 22nd April 2019 01:32 AM | Last Updated : 22nd April 2019 01:32 AM | அ+அ அ- |

தில்லி ரோஹிணி பகுதியில் திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அந்த தோட்டா பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்ததாக போலீஸார் கூறினர்
இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறியதாவது:
ரோஹிணி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் சனிக்கிழமை இரவு திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் வீட்டாரில் ஒருவர் கொண்டாட்டத்துக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.
அந்தத் தோட்டா, அப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது வீட்டின் மாடத்தில் நின்று திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்திக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உயர் சிகிச்சைக்காக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
சம்பந்தப்பட்ட திருமண ஊர்வலத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை தேடி வருகிறோம். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று போலீஸார் கூறினர்.