வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு
By DIN | Published On : 22nd April 2019 01:40 AM | Last Updated : 22nd April 2019 01:40 AM | அ+அ அ- |

தில்லி ரோஹிணி பகுதியில் இரு தரப்பினரிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தில்லி ஷாதிபூர் பகுதியைச் சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணிபுரிபவர் ஷுபம் (25). இவர், தனது காப்பீடு நிறுவனத்தின் சந்தாதாரராக இருக்கும் நபரிடம் ரூ.1,400 பணம் வசூலிப்பதற்காக ரோஹிணியின் அமன் விஹார் பகுதிக்கு சனிக்கிழமை சென்றார்.
அப்போது, சந்தாதாரரின் மகன்களுக்கும், ஷுபத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தாதாரரின் மகன்களில் ஒருவர் துப்பாக்கியால் ஷுபத்தை 3 முறை சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஷுபம் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷுபத்தை துப்பாக்கியால் சுட்ட நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.
சுட்டுக் கொலை: இதனிடையே, தில்லி புறநகர் பகுதியான பவானாவில் வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டுவந்த நபர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.