மக்களவைத் தேர்தலில் எனக்கான வாய்ப்பை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்
By DIN | Published On : 23rd April 2019 06:42 AM | Last Updated : 23rd April 2019 06:42 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் வடமேற்கு தில்லியில் மீண்டும் தாம் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பாஜக தெளிவுபடுத்த வேண்டுமென அக்கட்சி எம்.பி. உதித் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
வடமேற்கு தொகுதியில் உதித் ராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில் திங்கள்கிழமை கூறியதாவது:
நான் பாஜகவில் எனது கட்சியை இணைத்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்த உறுதியற்ற நிலையால் எனது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். வடமேற்கு தில்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக இதுவரை எனது பெயர் அறிவிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் பேச பலமுறை முயற்சித்தேன். அவருக்கு குறுந்தகவலும் அனுப்பினேன். பிரதமர் மோடியிடமும் இதுதொடர்பாக பேச முயற்சித்தேன். வடமேற்கு தில்லியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கூறி வந்தார்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தொடர்பு கொண்டேன். இந்த விவகாரத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணி வரையில் காத்திருப்பதென எனது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். நாட்டிலுள்ள தலித்களுக்கு பாஜக துரோகம் செய்யாது என நம்புகிறேன் என்று உதித் ராஜ் தனது சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளார்.
உதித் ராஜ் தனது "இந்திய நீதிக் கட்சி'யை பாஜகவில் இணைத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வடமேற்கு தில்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில், சாந்தினி செளக், வடகிழக்கு தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய தொகுதிகளின் தற்போதைய எம்.பி.க்களான ஹர்ஷ் வர்தன், மனோஜ் திவாரி, பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதூரி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
எனினும், புது தில்லி, கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் போகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், வடமேற்கு தில்லி பாஜக எம்.பி. உதித் ராஜ், மேற்கண்டவாறு கூறியுள்ளார்.