Enable Javscript for better performance
காங்கிரஸில் இணைந்தார் பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ்!- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸில் இணைந்தார் பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ்!

    By DIN  |   Published on : 24th April 2019 11:52 PM  |   அ+அ அ-   |    |  


    வடமேற்கு தில்லி பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்துப் பேசினார்.
    வடமேற்கு தில்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வடமேற்கு தில்லி தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வந்த தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் கட்சி புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நம்பி தமது இந்திய நீதிக் கட்சியை பாஜகவுடன் இணைத்ததாகவும், ஆனால் பாஜக கட்சித் தலைவர்களை நம்பி மோசம் போய் விட்டதாகவும் அவர் சாடியிருந்தார்.
    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உதித் ராஜ் புதன்கிழமை சந்தித்தார். அதைத் தொடர்ந்து,  தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர்  பி.வேணுகோபால்,  ஊடகப் பொறுப்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா,  தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் ஆகியோர் முன்னிலையில் உதித்ராஜ் அக்கட்சியில் இணைந்தார்.
    பின்னர், அவர் கூறியதாவது: தலித் விவகாரங்களில் நான் ஊமையாக இருக்க பாஜக விரும்பியது. ஆனால், அது போன்று நான் செயல்படவில்லை. இதனால்,  எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. நீண்ட காலமாகவே காங்கிரஸில் சேர விரும்பினேன். இது ராகுல் காந்திக்கும் தெரியும். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. வடமேற்கு தில்லி தொகுதியில் பாஜக சீட் கொடுத்திருந்தால் நான் போட்டியிட்டிருப்பேன். ஆனால், பாஜக அதைச் செய்யாததால், அக்கட்சி தலித் விரோதி என்பது வெளிச்சமாகிவிட்டது.
    தலித் பாதுகாப்பு தொடர்புடைய சட்டத்தின் ஷரத்துகளை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  நான் தெரிவித்த கருத்துகள் பாஜகவுக்கு பிடிக்கவில்லை. தலித்துகளுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பதை அக்கட்சி விரும்பவில்லை. ஆனால், என்னால் இந்த விஷயத்தில் சும்மா இருக்க முடியவில்லை. பாஜகவில் இருந்து நான் வெளியேற அக்கட்சிதான் காரணம்.  நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம், பாஜகவுக்கு 10 முதல் 15 சீட்டுகள் வரை இழப்பு ஏற்படும். வடமேற்கு தில்லி தொகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்றார் உதித் ராஜ். 
    சபரிமலை விவகாரத்தில்  பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை உதித் ராஜ் கூறி வந்தார். மேலும்,   கடந்த  ஆண்டில்  தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த "பாரத் பந்த்'  தொடர்பாகவும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் கருத்துகளைக் கூறியதாக சர்ச்சை எழுந்தது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp