தாய், தம்பியைக் கொன்றவர் கைது
By DIN | Published On : 26th April 2019 12:02 AM | Last Updated : 26th April 2019 12:02 AM | அ+அ அ- |

தில்லி துவாரகா அருகே உள்ள பிந்தாபூரில் தாய், தம்பியைக் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லி உத்தம் நகர் விஷ்வாஸ் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் அரோரா (56). சம்பவத்தன்று இவர் ஒரு சச்சரவில் தனது தாயார் லதா அரோராவையும் (75), சகோதரர் ராஜேந்தரையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் நரேஷிடம், இது தனது குடும்ப விஷயம் தலையிட வேண்டாம் என கூறி மிரட்டினார். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் அமித் குமார் மௌர்யா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காயமடைந்த லதா அரோரா, ராஜேந்தர் இருவரையும் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ராஜேந்தர் இறந்தார். சிகிச்சையில் இருந்த போது லதா அரோரா இறந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, உடைந்த மரத்தாலான மட்டை, வளைந்த கத்திரிக்கோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், சுனில் அரோராவையும் கைது செய்தனர். அவரது தந்தை இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில் தாயின் ஓய்வூதியம் மூலம் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.