தில்லியில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: ஷீலா தீட்ஷித் நம்பிக்கை

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என அக்கட்சின் தில்லி தலைவரும், வட கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீட்ஷித்


தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என அக்கட்சின் தில்லி தலைவரும், வட கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீட்ஷித் நம்பிக்கை தெரிவித்தார். 
தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கட்சியின் தில்லி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
தில்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஷீலா தீட்சித் (வட கிழக்கு தில்லி), ஜே.பி. அகர்வால் ( சாந்தினி செளக்), அஜய் மாக்கன் (புது தில்லி), அரவிந்தர் சிங் லவ்லி (கிழக்கு தில்லி), மஹாபல் மிஸ்ரா ( வட மேற்கு தில்லி), ராஜேஷ் லிலோத்யா ( மேற்கு தில்லி), விஜேந்தர் சிங் (தெற்கு தில்லி) ஆகிய ஏழு வேட்பாளர்களையும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
அப்போது ஷீலா தீட்சித் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் நம்பிக்கையுடன் இந்த வேட்பாளர்களை முன்நிறுத்தியுள்ளார். பொதுமக்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். இந்த வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வார்கள்' என்றார். 
இந்நிகழ்ச்சியில், பாஜகவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் சேர்ந்த மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஹர்ஷ் சர்மா, அவரது மனைவி உமா சர்மா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸிஸ் சேர்ந்த  இர்ஃபான் உல்லா, சமூக சேவகி உமா குப்தா, இளைஞர் தலைவர் ராஜேஷ் கெளர் ஆகியோரை  ஷீலா தீட்சித் வரவேற்றார். 
தில்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பி.சி. சோப்ரா, முன்னாள் அமைச்சர்கள் மங்கத் ராம் சிங்கல், ரமாகாந்த் கோஸ்வாமி, கிரண் வாலியா, ஜீதேந்தர் குமார் உள்ளிட்டோர் இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இருமுனைப் போட்டியே: இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ பேசியதாவது:
தொடக்கத்தில், தில்லியில் மும்முனைப் போட்டி (காங்கிரஸ்-பாஜக-ஆம் ஆத்மி) இருப்பதாகக் கருதினோம். ஆனால் தற்போது அத்தகைய சூழ்நிலை மாறி, தில்லியில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடிப் போட்டி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மியுடன் இனியும் கூட்டணி ஏற்படவாய்ப்பில்லை. கேஜரிவாலின் நோக்கத்தில் எங்களுக்குச் சந்தேகம் இருப்பதாலேயே, அவர்களுடனான கூட்டணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எந்தவொரு காரணமும் இன்றி கூட்டணியில் இருந்து அவர் பின்வாங்கியுள்ளார். அதனாலேயே, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் தீவிரமாக இருக்கிறாரா என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்தத் தேர்தல் ஒட்டுமொத்தமாக ராகுல் காந்தி-நரேந்திர மோடி இடையேயானது. இதில், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸுக்கு தான் கிடைக்கும் என்று பி.சி.சாக்கோ பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com