முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நியமனம்:பேரவைத் தலைவர் முடிவுக்கு எதிராக விஜேந்தர் குப்தா உயர்நீதிமன்றத்தில் மனு
By DIN | Published On : 04th August 2019 12:00 AM | Last Updated : 04th August 2019 12:00 AM | அ+அ அ- |

மாநகராட்சி கவுன்சிலர்களாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை மட்டும் நியமிக்கும் தில்லி சட்டப்பேரவைத் தலைவரின் அறிவிக்கையை ஒத்தி வைக்கக் கோரி, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள அந்த மனு, வரும் 6-ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
அந்த மனுவில் விஜேந்தர் குப்தா கூறியுள்ளதாவது:
தில்லி மாநகராட்சி சட்டம் 1957-இல் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, கவுன்சிலர் பதவிக்கான எம்எல்ஏக்களை சுழற்சி முறையில் பேரவைத் தலைவர் நியமிக்க வேண்டும். ஒருமுறை அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் எம்எல்ஏ, மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்படக் கூடாது.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சிக்கு வந்தது முதல் அந்தக் கட்சி எம்எல்ஏக்களே மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு எம்எல்ஏவும் இதுவரை கவுன்சிலர் பதவிக்கு பேரவைத் தலைவரால் நியமிக்கப்படவில்லை. பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை ஒருதலைப் பட்சமானது. எனவே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை மீண்டும் கவுன்சிலர்களாக நியமித்து பேரவைத் தலைவர் வெளியிட்ட அறிவிக்கையை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் விஜேந்தர் குப்தா கூறியுள்ளார்.
வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளுக்கான கவுன்சிலர் பதவியில் உள்ள 13 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை மீண்டும் அதே பதவியில் நியமித்து தில்லி சட்டப்பேரவை கடந்த ஜூலை 12-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் விஜேந்தர் குப்தா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.