முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஐஐடிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தகவல்
By DIN | Published On : 04th August 2019 12:00 AM | Last Updated : 04th August 2019 12:00 AM | அ+அ அ- |

நாட்டிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) நடப்புக் கல்வியாண்டுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சகத்தின் உயர்கல்வி செயலர் ஆர். சுப்ரமணியம் கூறுகையில், நாட்டிலுள்ள 23 இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. ஒரு கல்வியாண்டில், காலியிடங்கள் எதுவுமின்றி அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்புவது இதுவே முதல் முறையாகும். அனைத்து ஐஐடிகளின் ஒத்துழைப்பு காரணமாகவே இது சாத்தியமானது என்றார்.
கடந்த கல்வியாண்டில் ஐஐடிகள் அனைத்திலும் மொத்தம் 118 இடங்கள் காலியாக இருந்தன. சில பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாததே இடங்கள் காலியாக இருப்பதற்குக் காரணம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.
ஐஐடி-களில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தது. 2014-ஆம் ஆண்டில் மட்டுமே இந்த எண்ணிக்கை குறைந்திருந்தது. இதையடுத்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது.
இது தொடர்பாக, அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஐஐடி-களில் உள்ள ஒவ்வொரு துறையும், வேலைவாய்ப்பு, பொறியாளர்களின் தேவை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து அந்தத் துறையில் உள்ள இடங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் அனுமதி அளிக்க, அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது.
மேலும், ஐஐடி-களில் இணைவதற்கான கலந்தாய்வை பல சுற்றுகளாக நடத்தவும், குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்வது தொடர்பாக மாணவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல் அளிக்கவும் அக்குழு பரிந்துரைத்தது என்றார் அந்த உயரதிகாரி.