முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தவர் ஆண்டாள்!
By DIN | Published On : 04th August 2019 12:00 AM | Last Updated : 04th August 2019 12:00 AM | அ+அ அ- |

பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தவர் ஆண்டாள் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை ஆண்டாள் - தமிழால் உலகை ஆண்டாள் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதரின் சொல் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் துஷ்யந்த் ஸ்ரீதர் கூறியதாவது:
ஆண்டாளின் பிறப்பு, வளர்ப்பு அனைவரும் அறிந்ததே. ஆண்டாளின் தனிப்பெருமை அவர் சிறு வயதிலேயே பகவத் ஞானம் பெற்றவர் என்பதுதான். ஒருவர் ஞான நிலைக்கு நேரடியாகச் சென்றுவிடமுடியாது. அதற்கு பரபக்தி, பரஞான பக்தி, பரம பக்திகள் என்ற விஷயங்கள் தேவை என ஸ்ரீமத் பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்டாள் ஒவ்வொரு நிலையையும் கடந்தவர். அனைத்திலும் தனித்துவம் மிக்கவராகவும் இருந்தவர். அவர் பிறப்பிலேயே பகவத் ஞானம் பெற்றவர். திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடியவர். பெருமாளைத் திருமணம் செய்தவர். ஆண்டாள் இரண்டே பிரபந்தங்கள்தான் பாடினார்.
அவை வேதம் அனைத்திற்கும் ஒப்பான 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை; பெருமாளிடம் காதலை எடுத்துரைத்த 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி ஆகும்.
ஆண்டாளின் பெருமை உலகம் முழுவதும் பரவி இருப்பது இம்மண்ணுக்கு கிடைத்த பெருமை. பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த ஆண்டாளைக் கொண்டாடுவோம் என்று துஷ்யந்த் ஸ்ரீதர் கூறினார்.
முன்னதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில் துஷ்யந்த் ஸ்ரீதரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வின்போது துஷ்யந்த் ஸ்ரீதரை தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் இந்துபாலா கௌரவித்தார்.