ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுகிறார் அல்கா லம்பா!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அக்கட்சியின் சாந்தினி சௌக் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அக்கட்சியின் சாந்தினி சௌக் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்சித் தலைமையுடன் முரண்பட்டுள்ள அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சித் தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறார். மேலும், தன் மீதுள்ள அதிருப்தியால் தனது தொகுதியை ஆம் ஆத்மி தலைமை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும், சாந்தினி சௌக் தொகுதியில் தான் தொடங்கிவைத்த சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆம் ஆத்மி அரசு முட்டுக் கட்டை போட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், "கட்சியில் தொடர விரும்பவில்லை. கட்சியை விட்டு விலகி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சாந்தினி சௌக் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவது தொடர்பாக தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். எனது முடிவை ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கவுள்ளேன்' என்று கடந்த வெள்ளிக்கிழமை அவர் அறிவித்திருந்தார்.
 இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அவர் அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
எனது தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளேன். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சாந்தினி சௌக் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளேன். ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகினாலும், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன். ஏனென்றால் எனது தொகுதியில் நான் தொடக்கிவைத்த நிறைய மக்கள் நலப் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com