தில்லி - லாகூர் பேருந்து சேவை: டிடிசிக்கு 2 மாதங்களில் ரூ.7.81 லட்சம் நஷ்டம்!

தலைநகர் தில்லியிலிருந்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரமான லாகூருக்குச் சென்று வரும் பிரத்யேகமான

தலைநகர் தில்லியிலிருந்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரமான லாகூருக்குச் சென்று வரும் பிரத்யேகமான குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து சேவையை இயக்கியதால், கடந்த மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் ரூ.7.81 லட்சம் நஷ்டத்தை தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சந்தித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும், கடந்த மே மாதம் தில்லி-லாகூர் பேருந்தில் 146 பேர், ஜூனில் 140 பேர் பயணம் செய்துள்ளதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கடந்த 1999-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தில்லிக்கும் லாகூருக்குமிடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், இந்த சேவையை வாஜ்பாய் தொடங்கிவைத்தார். தில்லி கேட்டில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து தற்போது இந்தப் பேருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் லாகூருக்குப் புறப்படுகிறது. லாகூருக்கு மறுநாள் காலை 6 மணியளவில் சென்றடையும். இந்தப் பேருந்தில் மொத்தம் 40 இருக்கைககள் உள்ளன. 
இதேபோல, பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் (பிடிடிசி), லாகூரிலிருந்து தில்லிக்கு பேருந்து சேவையை நடத்தி வருகிறது. அந்தப் பேருந்து ஒவ்வொரு வாரமும் லாகூரிலிருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் புறப்படும். முழுவதும் குளிர் சாதன வசதியுள்ள தில்லி - லாகூர் பேருந்தில் பயணம் செய்யும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.2,400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் காலை உணவு, மதியம் சாப்பாடு, மாலையில் தேநீர் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், அண்மையில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், கடந்த மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் இந்தப் பேருந்து சேவையில் டிடிசிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தப் பேருந்து சேவையால் மே மாதம் டிடிசிக்கு ரூ.3,77,340 வருவாய் கிடைத்தது. ஆனால், செலவு ரூ.7,97,918 ஆகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் மே மாதம் மட்டும் நஷ்டம் ரூ.4.2 லட்சம் என டிடிசி புள்ளிவிவரத் தகவலில் தெரிய வந்துள்ளது. இதேபோல, ஜூன் மாதம் இந்தப் பேருந்து சேவைக்கு ரூ.7.81 லட்சம் செலவு செய்துள்ளது. ஆனால், வருவாய் ரூ.3.61 லட்சம்தான் கிடைத்துள்ளது. இதன் மூலம், மொத்தம் ஜூனில் மட்டும் ரூ.3.61 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
இது குறித்த ஆர்டிஐ தகவலில், இந்த இரண்டு மாதங்களில் டிடிசிக்கு ரூ.7.97 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், செலவு ரூ.15.79 லட்சம் ஆகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

மாதம்    பயணித்தவர்கள்    செலவு    வருவாய்
மே    146    ரூ.7,97,918    ரூ.3,77,340 
ஜூன்    140    ரூ.7,81,000    ரூ.3,61,000

"பொருளாதார நெருக்கடி'
"தில்லிக்கும் லாகூருக்கும் இடையே வாரத்தில் மூன்று நாள்கள் பேருந்து சேவையை நடத்துவதில் மிகுந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், லாகூருக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்கும் திட்டம் டிடிசிக்கு இதுவரை இல்லை' என்று டிடிசி அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com