மகாராஷ்டிரம், ஹரியாணாவில் மின் கட்டணத்தை குறைக்க முடியுமா? பாஜகவுக்கு கேஜரிவால் சவால்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆளும்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, தில்லியைப் போன்று மின் கட்டணத்தைக் குறைக்க முடியுமா? என்று தில்லி முதல்வர் கேஜரிவால் சவால் விட்டுள்ளார்.
தில்லியில் 200 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், 200- 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இதையடுத்து, தில்லியில் மிக விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பை கேஜரிவால் வெளியிட்டுள்ளார் என்று தில்லி பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஞாயிற்றுக்கிழமை கேஜரிவால் பேசியதாவது: 
தில்லியில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டோம். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை தில்லி அரசு வெளியிட்டுள்ளதாக பாஜக குறை கூறி அரசியலாக்கி வருகிறது. அப்படியென்றால், பாஜக ஆட்சி செய்து வரும் மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்களை ஆளும் பாஜக அரசு தில்லி அரசு அறிவித்ததுபோல மின் கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிடலாமே?
உண்மையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இரண்டுமே தில்லி அரசின் அறிவிப்பை பாராட்டுவதா அல்லது தூற்றுவதா எனக் குழப்பத்தில் உள்ளன. எந்தவொரு அரசும் தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பார்கள். ஆனால், இரவு பகலாக மக்கள் நலனுக்காக மட்டும் உழைத்த தில்லி அரசு, மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்றார் கேஜரிவால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com