வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை திட்டம்: தில்லி அரசு முடிவு

வெளிநாடுகளில் உயர் கல்வி கற்க விரும்பும் திறமையான தலித் மாணவர்கள் 100 பேருக்கு கல்வித் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

வெளிநாடுகளில் உயர் கல்வி கற்க விரும்பும் திறமையான தலித் மாணவர்கள் 100 பேருக்கு கல்வித் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் படிப்பில் திறமையான தலித் மாணவர்களில் 100 பேர் வெளிநாடுகளில் கலை, விவசாயம், சட்டம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் எம்பில், பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்புகளை படிக்க இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான முன்மொழிவை தில்லி எஸ்டி, எஸ்சி அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த முன்மொழிவுக்கு தில்லி அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 இது தொடர்பாக தில்லி எஸ்சி, எஸ்டி துறை அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் கூறியதாவது: மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர் கல்வியைப் படிக்க அதிகளவில் பணம் செலவாகிறது. திறமையான தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வியைப் பெற தில்லி அரசு உதவிக்கரம் நீட்டவுள்ளது. அதன்படி, 2 ஆண்டுப் படிப்புக்கு ரூ.10 லட்சம் வரையிலும், 4 ஆண்டுப் படிப்புக்கு ரூ.20 லட்சம் வரையிலும் உதவித்தொகை வழங்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. 
தலித் மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பர். பரோடா சமஸ்தானத்தின் அரசராக இருந்தவர் சய்யாஜி ராவ் கெய்க்வாட். 
அவர், பீம் ராவ் அம்பேத்கர் என்ற தலித் மாணவருக்கு வெளிநாட்டில் உயர் கல்வியைப் பெற உதவினார். அந்த மாணவர்தான் அம்பேத்கராக இந்திய வரலாற்றில் பெரும் சாதனைகளைப் படைத்தவர் என்றார் அவர்.
 மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 100 தலித் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் முதுகலை, ஆய்வுப் படிப்புகளில் கல்வி கற்க உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, அறிவியல், பொறியியல், மேலாண்மை, மருத்துவம், வணிகவியல், சமூக அறிவியல், நிகழ்கலை ஆகிய துறைகளில் உயர் படிப்பை படிக்க ரூ.10 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com