சுதந்திர தினக் கொண்டாட்டம்: தில்லி செங்கோட்டையில் முழு அணிவகுப்பு ஒத்திகை

தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் முழு அணிவகுப்பு ஒத்திகை பலத்த பாதுகாப்புடன்

தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் முழு அணிவகுப்பு ஒத்திகை பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர்கள் தேசிய மூவண்ணக் கொடியைப்போல் உடை அணிந்து அமர்ந்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாட்டின் 73 சுதந்திரத் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை கொடி ஏற்றி உரையாற்ற உள்ளார். இதை முன்னிட்டு தில்லி செங்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
என்எஸ்ஜி படையைச் சேர்ந்த துல்லியமாக துப்பாக்கிச் சுடும் வீரர்கள், ஸ்வாட் கமாண்டோ படை வீரர்கள் ஆகியோர் செங்கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இதனிடையே, செங்கோட்டையில் முப்படைகள் நிகழத்திய முழு அணிவகுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்று பிரதமர் பதவியை மோடி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் சுந்திர தின நிகழ்ச்சி இதுவாகும்.


மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்
சுதந்திர தினத்தன்று மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது. மேலும், சுதந்திர தினத்தன்று வயலட் வழித் தடத்தில் குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டிஎம்ஆர்சி அதிகாரிகள் கூறியதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 (வியாழக்கிழமை) அன்று தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் வழக்கம்போல செயல்படும். ஆனால், சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புக் காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்த மையங்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 6 மணி முதல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மதியம் 2 மணிவரை மூடப்பட்டிருக்கும். வயலட் வழித்தடத்தில் அமைந்துள்ள லால் கிலா, ஜாமா மசூதி, தில்லி கேட், ஐடிஓ ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் சில நுழைவாயில்கள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், சுதந்திர தினத்தன்று செங்கோட்டைக்கு வருபவர்களைக் கருத்தில் கொண்டு லால் கிலா, ஜாமா மசூதி ஆகிய மெட்ரோ நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்படும். மேலும், செங்கோட்டைக்கு வருபவர்களுக்கு உதவும் வகையில் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com