காவல் துறை துணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஃபரீதாபாத் காவல் துறை துணை ஆணையர் விக்ரம் கபூர், தனது வீட்டில் பணித் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஃபரீதாபாத் காவல் துறை துணை ஆணையர் விக்ரம் கபூர், தனது வீட்டில் பணித் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் அவர் எழுதிவைத்திருந்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பூபானி காவல் நிலைய அதிகாரி அப்துல் ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தற்கொலைக் குறிப்பில் என்ன விவரங்கள் உள்ளது என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும், அந்தக் கடிதத்தில், காவல் நிலைய அதிகாரியும் மற்றொருவரும் சேர்ந்து அவரை ரகசியமாக மிரட்டியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பாலாவைச் சேர்ந்த விக்ரம் கபூர், ஹரியாணா போலீஸில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது ஃபரீதாபாத்தில் காவல் துறை துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டில் புதன்கிழமை காலை 6 மணியளவில் பணித் துப்பாக்கியை வாயில் வைத்து சுட்டுள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதும், அவரது மனைவி, அந்த அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, விக்ரம் கபூர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து அவரும், அவரது மகனும் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். 
இது குறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறுகையில், "கடந்த ஓராண்டாக துணை ஆணையர் பதவியில் இருந்த விக்ரம் கபூர் வரும் 2020-இல் ஓய்வு பெறவிருந்தார்' என்றார்.
அவரது மறைவு குறித்து காவல் துறை ஆணையர் சஞ்சய் குமார் கூறுகையில், "விக்ரம் கபூரின் மறைவுக்கு காவல் துறை அலுவலகங்கள் அனைத்திலும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சாவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com