தில்லி அரசுப் பள்ளிகளில் "தேசபக்தி' பாடத் திட்டம்: முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லி அரசுப் பள்ளிகளில்

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லி அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தேச பக்தி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளானதை நினைவுகூரும் வகையில், "அரசியல் அமைப்புச் சட்டம்-70' என்ற நிகழ்வு தில்லி தியாகராஜா அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்றுப் பேசியதாவது: நாட்டை நேசிப்பதுடன் நாடு தொடர்பாக தங்களது கடமைகளைப் புரிந்து கொள்வதுதான் உண்மையான தேசபக்தியாகும். 
அனைத்து மாணவர்களும் சிறந்த குடிமகன்களாக உருவாவதை உறுதிப்படுத்த வேண்டியது கல்வியின் கடமையாகும். தேசப்பற்றுள்ள குடிமகன்களை உருவாக்கும் வகையில், தில்லி அரசுப் பள்ளிகளில் "தேசபக்தி' பாடத் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் தொடங்கவுள்ளோம். இப்பாடத் திட்டத்தில் கற்பிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
எல்லையில் பிரச்னை ஏற்படும் போதும், இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கும் போதும் மட்டும்தான் நாம் நாட்டைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால், நமது அன்றாட வாழ்க்கையில் நாட்டைப் பற்றி சிந்திக்க மறந்து விடுகிறோம். இந்த தேசபக்தி பாடத் திட்டத்தில் நாட்டை நேசிப்பது தொடர்பாக மாணவர்களுக்குப் போதிக்கவுள்ளோம். 
தேசபக்திப் பாடத்தைக் கற்கும் மாணவர் வளர்ந்து, லஞ்சம் வாங்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகினால், அப்போது தான் லஞ்சம் வாங்கினால் அது பாரத மாதாவுக்குச் செய்யும் துரோகமாக நினைப்பார். அதேபோல, போக்குவரத்து சமிக்ஞையை மீறினால், அதையும் பாரத மாதாவுக்கு செய்யும் துரோகமாகப் பார்ப்பார்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். இந்தியர்களிடையே உண்மையான தேசபக்தி இருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. நமது நாட்டுக்கு விருந்தினர்களாக வருபவர்கள் நமது நாட்டைப் பற்றி உயர்வாக எண்ணும் வகையில், நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். உண்மையான தேசபக்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
 ஒவ்வொரு குழந்தையும் நாடு தொடர்பாக பெருமையாக உணர வேண்டும்; நாட்டின் பெருமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; நாடு தொடர்பான தங்களது கடமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் ஆகிய மூன்று முக்கியக் குறிக்கோள்களை மனதில் வைத்து இந்தப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். 
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாட்டுப் பற்றுள்ள மாணவர்களாலேயே தீர்க்க முடியும். இதற்கு தேசபக்தி பாடத் திட்டம் அவசியமாகும். 73-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், இந்த தேசபக்திப் பாடத் திட்டம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பரிசாக அமையும் என்றார் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com