வாராணசியில் கங்கா ஆரத்தியைக் காண விரைவில் எல்இடி திரைகள்!
By DIN | Published On : 19th August 2019 06:19 AM | Last Updated : 19th August 2019 06:19 AM | அ+அ அ- |

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் படித்துறையில் தினமும் நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்வை நேரடியாக காண அனைத்து படித்துறைகளிலும் மிகப் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்படும் என்று மத்திய பொதுப் பணித் துறை அறிவித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தசாஅஸ்வமேத படித்துறையில் தினமும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண ஆயிரக்கணக்கானோர் திரள்வர். கங்கை நதியோரம் அமைந்துள்ள பல்வேறு படித்துறைகளிலும் கங்கா ஆரத்தியைக் காண வசதியாக மிகப் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்படும். காசி விஸ்வநாதர் கோயிலில் எடுக்கப்படும் ஆரத்தியும் அனைத்து எல்இடி திரைகளிலும் காண்பிக்கப்படும். இதற்கு ரூ.11.5 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் எல்இடி திரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயுடன் இணைந்து பிரதமர் மோடி கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வாராணசி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வாராணசியில் தொடங்கி வைத்தார்.