யமுனையில் வெள்ளம் மேலும் குறைந்தது!

தில்லி யமுனையில் வெள்ளம் வெள்ளிக்கிழமை மேலும் குறைந்தது. பிற்பகல் 1 மணியளவில் யமுனையில் வெள்ளம் 204.50 மீட்டர் என்ற அளவில் சென்று கொண்டிருந்தது.

தில்லி யமுனையில் வெள்ளம் வெள்ளிக்கிழமை மேலும் குறைந்தது. பிற்பகல் 1 மணியளவில் யமுனையில் வெள்ளம் 204.50 மீட்டர் என்ற அளவில் சென்று கொண்டிருந்தது.
ஹரியாணா மாநிலம், ஹத்ணி குண்ட் தடுப்பணையில் இருந்து கடந்த வாரம் அதிக அளவில் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், தில்லி யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த அணையில் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கடந்த திங்கள்கிழமை யமுனையில் வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைக் கடந்தது.
இதைத் தொடர்ந்து, யமுனையின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, வியாழக்கிழமை வரை சுமார் 20,500 பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் 15,000-க்கும் மேற்பட்டோர் அரசு அமைத்துள்ள தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ளவர்களுக்கு குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும்படி தில்லி முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டார். 
இந்நிலையில், கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்களிலும் வெள்ளம் குறையாமல் அபாய அளவைக் கடந்து 206.60 மீட்டர் என்ற அளவில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஹத்ணி குண்ட் தடுப்பணையில் புதன்கிழமை மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தில்லி யமுனையில் வியாழக்கிழமை வெள்ளம் அபாய அளவுக்குக் கீழே குறைந்தது. அன்று இரவு 9 மணியளவில் நீர்மட்டம் 204.55 மீட்டர் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் யமுனையின் நீர்மட்டம் மேலும் குறைந்தது.
இது குறித்து தில்லி அரசின் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறுகையில், "வெள்ளிக்கிழமை 1 மணியளவில் யமுனையின் வெள்ளம் 204.20 மீட்டர் என்ற நிலையில் இருந்தது. ஹரியாணாவின் ஹத்ணி குண்ட் அணையில் தற்போது அதிகளவில் நீர் திறந்துவிடப்படவில்லை. இதனால், யமுனையின் நீர்மட்டம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.

கரையோர மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது தில்லி அரசு
வெள்ளத்திற்குப் பிறகு நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும், யமுனைக் கரையோர மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருப்பதாகவும் பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: யமுனையில் வெள்ளம் தணிந்துவிட்ட பிறகு யமுனைக் கரைகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளதன் காரணமாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கேஜரிவால் அரசு இதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
யமுனையில் நீரின் அளவு அபாய அளவைக் கடந்த பிறகு, கரையோரம் அமைந்துள்ள காலனிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டது. தற்போது இரு நாள்களாக தண்ணீர் அளவு தணிந்து கொண்டிருக்கிறது. ஆனால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதால் இது கொசுப் பெருக்கத்திற்கும் நோய்களின் பரவலுக்கும் காரணமாகிவிடும். வெள்ளச் சூழலின்போது மக்களுக்கு கேஜரிவால் அரசு நிவாரணம் அளிக்கவில்லை.
 தற்போது மக்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி முகாம்களில் வசித்து வருகின்றனர். மக்களின் சுகாதாரம் குறித்து பெரிதாக அரசு அக்கறைக் கொள்ளவில்லை. உரிய நேரத்தில் திடமான நடவடிக்கைகளை கேஜரிவால் அரசு ஏன் எடுக்கவில்லை. பெருவாரியான ஆதரவு அளித்து கேஜரிவால் அரசை மக்கள் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தனர். ஆனால், முடிக்கப்படாத பணிகளின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ள கேஜரிவால் அரசு, அந்தப் பணம் மூலம் யமுனைக் கரையோரங்களில் வாழும் மக்களின் புனர்வாழ்வுக்காக செலவழித்திருக்க முடியும். ஆனால், மக்களின் நம்பிக்கையை தில்லி அரசு வஞ்சித்து விட்டது. இதனால், மக்கள் தில்லி அரசுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com