விஜேந்தர் குப்தா கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்: சட்டப்பேரவைத் தலைவர் கோயல் உத்தரவு

தில்லி சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதிலும்  இருந்து எதிர்க்கட்சித் தலைவரும்

தில்லி சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதிலும்  இருந்து எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான விஜேந்தர் குப்தாவை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 
தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை கூடியதும், "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று பாஜக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் மறுப்புத் தெரிவித்தார். "மத்திய அரசின் நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துவிட்டார். இது தேசிய விவகாரம் என்பதால் தில்லி சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாம்' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று பேரவைத் தலைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மஜிந்தர் சிங் சிர்சா, விஜேந்தர் குப்தா ஆகியோரை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். பின்னர் சட்டபேரவை நடைபெறும் அடுத்த இரண்டு நாள்களுக்கும் விஜேந்தர் குப்தாவை இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் ஓ.பி. சர்மா, ஜெகதீஷ் பிரதான் ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.
அல்கா லம்பாவும் வெளியேற்றம்: இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அல்கா லம்பாவும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டார். முன்னதாக, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசிய அல்கா லம்பா, "தில்லி அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்று தில்லி அரசு கூறுகிறது. ஆனால், தில்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் தனியார் மருந்துக்கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கு
வதாக குற்றம்சாட்டியுள்ளனர்' என்றார்.
"இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும்' என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறினார். அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அல்கா லம்பா தொடர்ந்து அவையில் குரல் எழுப்பினார். 
இருக்கையில் அமர பேரவைத் தலைவர் தொடர்ந்து கூறியதையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, அல்கா லம்பாவை அவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். 
தீர்மானம் நிறைவேற்றம்: பின்னர் அவையில் பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்களின் முக்கிய பிரச்னைகளை அவையில் விவாதிப்பதில் இருந்து திசை திருப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு விஜேந்தர் குப்தா கட்டுப்படவில்லை என்று கூறி அவரை கூட்டத் தொடரில் இருந்து இரண்டு நாள்கள் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஆம் ஆத்மி எம்எல்ஏ நிதின் தியாகி கொண்டு வந்தார். பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, துக்ளகாபாதில் ரவிதாஸ் கோயில் இடிப்பு விவகாரம் குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வெள்ளிக்கிழமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தார். 
அப்போது பேசிய அவர், "ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்ட இடம் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடமாகும். இந்த இடத்தை வனப் பிரிவில் இருந்து மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து  தில்லி அரசு பெற்ற பின்புதான், மத்திய அரசுக்கு இதுதொடர்பான அனுமதி கோரி தில்லி அரசு கடிதம் அனுப்பும்' என்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில், "ரவிதாஸ் கோயில் கட்டுவதற்கான இடத்தை வனப் பிரிவில் இருந்து மாற்றம் செய்தால், புதிய கோயில் கட்டுவதற்கு பாஜக நடவடிக்கை எடுக்கும்' என்று எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார்.

முதல்வர் அறை முன் தர்னா
தில்லி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, ஓ.பி. சர்மா, ஜெகதீஷ் பிரதான், மன்ஜீந்தர் சிங் சிர்சா ஆகியோர்  முதல்வர் கேஜரிவால் அறையின் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜேந்தர் குப்தா, "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். அப்போதுதான், தில்லி மக்களின் உணர்வுகள் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு சென்றடையும். இது தொடர்பாக பேரவைத் தலைவருக்கு கடந்த திங்கள்கிழமையே நான் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால், இதற்கு பேரவைத் தலைவர் மறுப்பு தெரிவித்து விட்டார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com