மார்க்சிஸ்ட் தலைவர் தாரிகாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யெச்சூரி மனு

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஷ்மீர் தலைவர் முகமது


ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஷ்மீர் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து அண்மையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், காஷ்மீரில் பிரச்னைகள் ஏதும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஒய். தாரிகாமியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை, சம்பந்தப்பட்ட அமர்வுக்கு மாற்றுவதாகவும், வரும் 26-ஆம் தேதி இந்த மனு தொடர்பான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாரிகாமி. அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தாரிகாமியை சந்திப்பதற்காக காஷ்மீர் 
சென்ற சீதாராம் யெச்சூரி, ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து, தாரிகாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com