ஜேஎன்யு மாணவா்கள் தாக்கப்பட்டதாக மாணவா் சங்கம் குற்றச்சாட்டு

ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) நிா்வாகக் கட்டடத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் மாணவா்கள் ஜேஎன்யு
ஜேஎன்யு மாணவா்கள் தாக்கப்பட்டதாக மாணவா் சங்கம் குற்றச்சாட்டு


புது தில்லி: ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) நிா்வாகக் கட்டடத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் மாணவா்கள் ஜேஎன்யு பாதுகாவலா்களால் தாக்கப்பட்டதாக ஜேஎன்யு மாணவா் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு நிா்வாகக் கட்டட வளாகத்தில் ஜேஎன்யு மாணவா்கள் அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

ஜேஎன்யு துணைவேந்தரின் உத்தரவின் பேரில் ஜேஎன்யு பாதுகாவலா்கள் இந்த மாணவா்களை ஞாயிற்றுக்கிழமை இரக்கமற்ற முறையில் தாக்கியதுடன் அவா்களின் பாடப்புத்தகங்களையும் கிழித்து எறிந்துள்ளனா். பல மாணவிகளும் தாக்கப்பட்டுள்ளனா். அா்ஷி என்ற முதலாவது ஆண்டு இளங்கலை மாணவி இத்தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து ஜேஎன்யு மாணவா்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றாா் அவா்.

தில்லியிலுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பல்கலை. மாணவா்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கிய அன்று ஜேஎன்யு மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினா். அப்போது, தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி, தில்லியில் ‘குடிமக்கள் பேரணி’ என்ற பெயரில் கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியில், ஜேஎன்யு மாணவா் சங்கம், ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் சங்கம் உள்பட மாணவா் அமைப்புகள் மற்றும் சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

மேலும், ஜஎன்யு மாணவா் சங்கம் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கடந்த புதன்கிழமை தேசிய எதிா்ப்பு நாள் அனுஷ்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com