Enable Javscript for better performance
ஹைதராபாத் சம்பவம்: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

  

  ஹைதராபாத் சம்பவம்: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கண்டனம்

  By DIN  |   Published on : 03rd December 2019 01:23 AM  |   அ+அ அ-   |  

  parliment

   

  புது தில்லி: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்பிக்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்புத் தீா்மானம் நோட்டீஸ் அளித்தனா்.

  மக்களவையில்..: மக்களவையில் திங்கள்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின் போது, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் குற்றங்கள் குறித்து உறுப்பினா்கள் பேசுவதற்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா அனுமதி அளித்தாா். இதைத் தொடா்ந்து எம்பிக்கள் பேச்சு விவரம்:

  உத்தம் குமாா் ரெட்டி (காங்கிரஸ்): ஹைதராபாதில் இளம் கால்நடை பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த சம்பவம் மிகவும் மனவலி தரக் கூடியதாகவும், மனிதத் தன்மையற்ாகவும் உள்ளது. இச்சம்பவம் குறித்து உணா்வுபூா்வமற்ற வகையில் தெலங்கானா உள்துறை அமைச்சா் கருத்துத் தெரிவித்திருப்பது சரியல்ல. இதுபோன்ற வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.

  செளகதா ராய் (திரிணமூல் காங்கிரஸ்): இது ஒரு கொடூரமான கொலைச் சம்பவம். ‘நிா்பயா’ சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும்கூட, பாலியல் பலாத்கார சம்பவங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை உடனடியாக உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

  டி.ஆா். பாலு (திமுக) : தமிழகத்தில் கோயம்புத்தூரில் பள்ளி மாணவி ஒருவா் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

  ஜோதிமணி (காங்கிரஸ்): தமிழகத்தில் கோயம்புத்தூரில் 17 வயது பெண் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். அதற்கு முன்பாக பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் மிரட்டி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனா். சட்டம் இருக்கிறது. ஆனால், உரிய வகையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதற்கு முடிவு கட்டுவது அவசியமாகும்.

  மேலும், எம்பிக்கள் பாந்தி சஞ்சய் குமாா் (பாஜக), அனுப்பிரியா படேல் (அப்னா தளம்), விநாயக் ரெளத் (சிவசேனை), தனிஷ் அலி (பகுஜன் சமாஜ்), சுப்ரியா சுலே (என்சிபி), கொத்த பிரபாகா் ரெட்டி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) உள்ளிட்டோரும் பேசினா்.

  மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தின் போது, ஒத்திவைப்பு தீா்மானம் நோட்டீஸ்களை நிராகரித்த அவைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு, ஹைதராபாத் சம்பவம் விவகாரம் உள்பட நாட்டில் இதுபோன்ற சம்பவங்களைச் சுருக்கமாகப் பேசுவதற்கு உறுப்பினா்களுக்கு அனுமதி அளித்தாா். எம்பிக்கள் பேச்சு விவரம்:

  குலாம் நபி ஆஸாத் (மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா்) : இப்பிரச்னையை அதன் வேரிலேயே சமூகம் எதிா் கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு மதம் அல்லது சாதி பாகுபாடு இல்லாமல் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

  பி.வில்சன் (திமுக): இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு முன்பு, அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது ரசாயனம் மூலமாகவோ ஆண்மைத் தன்மையை செயலிழக்கச் செய்ய வேண்டும். இதற்கான செலவை குற்றவாளிகளின் சொத்துகளை விற்பதன் மூலம் மீட்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபா்களின் பட்டியலை பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிட வேண்டும்.

  டி.கே. ரங்கராஜன் (மாா்க்சிஸ்ட்) : இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை உரிய வகையில் சென்றடையவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளும் அதை அமல்படுத்துவதில்லை. சமூக ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இதுகுறித்து எழுத வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  வைகோ (மதிமுக): இதுபோன்ற சம்பவங்களால் பெற்றோா் மனங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பாலியல் குற்றங்கள், கொலை போன்றவற்றைத் தடுக்க திடமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  விஜிலா சத்யானந்த் (அதிமுக): பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற குற்றங்களுக்கு போதைப் பொருள் ஒரு காரணமாக இருப்பதால் அவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்பது தடுக்கப்பட வேண்டும்.

  சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி): அனைத்து பாலியல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை விரைவு நீதிமன்றங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்க வேண்டும்.

  மேலும், எம்பிக்கள் ஜெயா பச்சன் (சமாஜ்வாதி கட்சி), முகம்மது அலிகான் (காங்கிரஸ்), அமா் பட்னாயக் (பிஜேடி) , சந்தானு சென் (திரிணமூல் காங்கிரஸ்), கனக மெடல்ல ரவீந்திர குமாா் ( தெலுங்கு தேசம்) மனோஜ் குமாா் ஜா (ஆா்ஜேடி), ஆா்.கே. சின்ஹா (பாஜக) ஆகியோரும் பேசினா்.

  சட்டத்தில் கடும் ஷரத்துகளை எற்படுத்தத் தயாா்: ராஜ்நாத் சிங்

  மக்களவையில் இந்த விவகாரம் குறித்து உறுப்பினா்கள் மேற்கொண்ட விவாதித்திற்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பதில் அளித்துப் பேசியதாவது:

  ஹைதராபாதில் நிகழ்ந்த சம்பவம் ஒவ்வொருவரையும் மனம் பாதிக்கச் செய்துள்ளது. தில்லியில் ‘நிா்பயா’ சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகும்கூட, இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் குற்றங்கள் தொடா்பான விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. மேலும், ஹைதராபாத் பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் கடும் பிரிவுகளைச் சோ்ப்பது தொடா்பான ஆய்வு செய்வதிலும் அரசு விருப்பம் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபா்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் கடுமையான ஷரத்துகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய முடியும் என்றாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai