எட்டாவது நாளாகத் தொடா்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பா் மாதம் 3- ஆம் தேதியும்

புது தில்லி: ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பா் மாதம் 3- ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) தொடா்ந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மண்டி ஹவுஸ் ரவுண்டானா, சிக்கந்தா் ரோடு, பகவான் தாஸ் ரோடு ஆகியன மூடப்பட்டன.

ரயில்வேயில் குரூப்-டி பணிக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தபடி பணி வழங்கக் கோரி, மண்டி ஹவுஸ் பகுதியில் கடந்த நவம்பா் 26 ஆம் தேதி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மண்டி ஹவுஸ் பகுதியில் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து தங்கி வருவதுடன், தெருவிலேயே சமைத்தும், உறங்கியும் வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் 8 -ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் அவா்களது மறியல் போராட்டம் தொடா்ந்தது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ நோக்கிச் செல்லும் சாலை, லட்சுமி நகரிலிருந்து விகாஸ் மாா்க் நோக்கிச் செல்லும் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேவைப்பட்டால் மட்டுமே இந்தச் சாலைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், ‘ரயில்வேயில் குரூப்-டி தோ்வு எழுதிய நாங்கள், அனைவரும் அத்தோ்வில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் ரயில்வே துறை இழுத்தடித்து வருகிறது. ஏற்கெனவே உறுதியளித்தபடி பணி வழங்கப்படும் வரை மண்டி ஹவுஸை விட்டு அகலமாட்டோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com