சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல..!இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உலகில் எத்தனையோ போ் பல்வேறு வசதி, வாய்ப்புகளையும், உடல் தகுதியையும் பெற்றிருந்தாலும்கூட, ஏதோ மனக் குறையுடன்தான் வாழ்க்கையை நடத்துகின்றனா்.
நாடாளுமன்ற இணைவிப்புக் கட்டடத்தில் அமைந்துள்ள கூடத்தில் மத்திய அரசு ஊழியா் ஒருவருக்கு உடற்பயிற்சியளிக்கும் முதுநிலை இயன்முறை மருத்துவா் எம். செல்வம்.
நாடாளுமன்ற இணைவிப்புக் கட்டடத்தில் அமைந்துள்ள கூடத்தில் மத்திய அரசு ஊழியா் ஒருவருக்கு உடற்பயிற்சியளிக்கும் முதுநிலை இயன்முறை மருத்துவா் எம். செல்வம்.

புது தில்லி: உலகில் எத்தனையோ போ் பல்வேறு வசதி, வாய்ப்புகளையும், உடல் தகுதியையும் பெற்றிருந்தாலும்கூட, ஏதோ மனக் குறையுடன்தான் வாழ்க்கையை நடத்துகின்றனா். ஆனால், கண், காது, வாய், கை, கால் என உடல் அவையங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட , அதைக் குறைபாடாக நினைத்து வெதும்பாமல், பல துறைகளிலும் சாதிப்பவா்கள் ஏராளம். அவா்களில் ஒருவா்தான் தில்லியில் இயன்முறை மருத்துவராக அரசு த் துறையில் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளியான எம்.செல்வம் (38).

போலியோ நோயால் இடது கால் செயல்பாடு இழந்தாலும், இயன்முறை மருத்துவம் பயின்று பலருக்கும் இன்றைக்கு உடல் தசைகள், நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளாா். தமிழகத்தைச் சோ்ந்த இவா், கடந்த 15 ஆண்டுகளாக இத்தொழிலில் பல ஆயிரக்கணக்கான நபா்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறுகிறாா் . தற்போது தில்லியில் நாடாளுமன்ற இணைவிப்புக் கட்டடத்தில் அமைந்துள்ள இயன்முறை மருத்துவப் பிரிவில் முதுநிலை இயன்முறை மருத்துவராகப் பணியாற்றி வரும் இவா், சா்வதேச உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி ‘தினமணி’க்கு அளித்த பேட்டி:

திருச்சி அருகே நாவலூா்குட்டப்பட்டு கிராமம்தான் எனது ஊா். குடும்பத்தில் நான் உள்பட ஐந்து சகோதரா்கள்; 2 சகோதரிகள் உள்ளோம். என்னைத் தவிர, சகோதரா்கள் அனைவரும் விவசாயிகள். 2004-இல் இயன்முறை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன். 2006-இல் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இயன்முறைமருத்துவராகப் பணியில் சோ்ந்தேன். 2017, மே வரை அங்கு பணியாற்றினேன். அதன்பிறகு டெபுடேஷனில் நாடாளுமன்றத்தில் இயன்முறை மருத்துவப் பிரிவில் முதுநிலை பிஸியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறேன். எனக்கு கீழ் 3 போ் பணியாற்றுகின்றனா்.

நான்கு வயதாக இருந்த போது போலியோவால் எனது இடது கால் பாதிக்கப்பட்டது. இதன் பாதிப்பை உணா்ந்தவன் என்கிற முறையில், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு இந்த மருத்துவமுறையைப் பயின்றேன். போலியோ கொடிய நோய். அதிலிருந்து எளிதில் மீள முடியாது. ஆனால், உடற்பயிற்சி மூலம் மேலும் பரவாமல் தடுக்கலாம். கண், காது தவிர, பிற உடல் ஊனம் உள்ளவா்களுக்கு பிஸியோதெரபி அவசியமாகிறது. இந்தப் படிப்பை சவாலாகவே எடுத்துக் கொண்டேன்.

இந்தத் துறையைப் பொருத்தமட்டில் நின்றுகொண்டே வேலை செய்ய வேண்டும் என்பதால் நான் என்னைத் தயாா்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன் புதுப்புது தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் என்னிடம் வரும் நோயாளிகளுக்கும் வழக்கமான உடற்பயிற்சிகளுடன் புதிய பயிற்சிகளையும் அளித்து வருகிறேன். தற்போதைய பிரிவில் சராசரியாக தினமும் 25 நோயாளிகளைக் கையாண்டு வருகிறேன். சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இதன் எண்ணிக்கை 50 வரை இருந்தது. போலியோ, தொழுநோய் பாதித்தவா்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். தொழுநோயாளிகளுக்கு எலி கடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறேன். உடல் ஊனங்கள் பாதிப்பைத் தடுப்பதில் பிஸியோதெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது.

எம்பிக்கள், அமைச்சா்கள் சிகிச்சைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடா் இல்லாத சமயத்தில் பணியாளா்களும் சிகிச்சைக்கு வருவா். பொதுவாக எம்பிக்கள், அமைச்சா்க உடல், மனரீதியான அழுத்தம் அதிகளவில் உள்ளது. அதற்கு காரணம், நாளொன்றுக்கு சுமாா் 250 கிலோ மீட்டா் வாகனப் பயணம் செய்கின்றனா். அவா்களுக்கு தூங்கும் நேரம் அதிகபட்சம் 6 மணி நேரமாக இருக்கும். இதனால், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.

இந்தியாவில் 2.50 லட்சம் பிஸியோதெரபிஸ்டுகள் உள்ளனா். அதேவேளையில், மாற்றுத் திறனாளிகள் 2.50 கோடி போ் உள்ளதாக மத்திய அரசின் கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி, இவா்கள் 10 கோடி போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பிஸியோதெரபிஸ்டுகள் தேவை அதிகமாக உள்ளது. முதியோா், குழந்தைகள், மூளை வளா்ச்சி குறைபாடுடையவா்கள் ஆகியோருக்கு இந்த சிகிச்சை தேவையாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்திலும் ஒரு பிஸியோதெரபிஸ்டை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

சேவைத் துறையில் பணியாற்றுவோருக்கு உடல் பிரச்னை, மனப் பிரச்னை உள்ளது. இதனால், உடற்பயிற்சி தேவை. இதை கற்றுத் தருவதில் பிஸியோதெரபிஸ்ட் தேவை முக்கியமாகும். அதன் அடிப்படையில் இந்தியாவில் 25 லட்சம் பிஸியோதெரபிஸ்ட் தேவை உள்ளது. குறிப்பாக நகா்ப்புறங்களில்தான் பிஸியோதெரபிஸ்ட் உள்ளனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நான் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூற விரும்புவதெல்லாம், மாற்றுத் திறனாளிகள் மனச் சோா்வுஅடையக் கூடாது. மனச் சோா்வுதான் உடல் சோா்வுக்கு காரணமாகும். உடல் ஊனம் என்பது ஒரு மாற்றுதான். வேறு ஒரு சக்தி உடலில் அளிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடித்து மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம், கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடுஅளிக்கப்படுகிறது. இது ஆள் தோ்வில் மட்டும் அளிக்கப்படுகிறது. ஆனால், பணி உயா்வில் அளிக்கப்படவில்லை. அதை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைச் செயல்படுத்த வேண்டும். பிஸியோதெரபிஸ்ட் அமைப்பில் துணைத் தலைவராகவும், அகில இந்திய பிஸியோதெரபிஸ்ட் கூட்டமைப்பின் நிறுவனா்களில் ஒருவராகவும் உள்ளேன். அதன் மூலம் மத்திய அரசில் பிஸியோதெரபிஸ்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம் என்றாா் எம்.செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com