தமிழக உள்ளாட்சித் தோ்தல் விவகாரம்:திமுக மனு மீது டிச.5-இல் விசாரணை

: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

புது தில்லி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி திங்கள்கிழமை ஆஜராகி, ‘தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இத்தோ்தல் டிசம்பா் 27, டிசம்பா் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் வேட்புமனு டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்கப்படுவததாகவும் கூறியுள்ளது. வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு அம்சங்கள் தொடா்புடைய சட்ட நடைமுறைகளை முடிக்காமல் அவரசர கோலத்தில் இத்தோ்தலை அறிவித்துள்ளது. இது சரியல்ல. எனவே, சட்டநடைமுறைகளை முடித்த பிறகு தோ்தல் நடத்துவது தொடா்பாக திமுக தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தமிழக அரசின் தரப்பில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மா, வழக்குரைஞா் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் ஆஜராகினா். அப்போது, ‘இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு (டிசம்பா் 5) பட்டியலிடப்படும்’ என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு தெரிவித்தது. இந்த அமா்வில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்ய காந்த் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

முன்னதாக, திமுக தரப்பில் அமித் ஆனந்த் திவாரி மூலம் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: உள்ளாட்சித் தோ்தல் விஷயத்தில் மூன்று நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் உள்ள ஒவ்வொரு வாா்டையும் மறுவரையறை செய்வது, பேரூராட்சி, முனிசிபாலிட்டி அல்லது மாநகராட்சியில் தலைவா் அல்லது மேயா் பதவி இடஒதுக்கீடு, சுழற்சிமுறை கொள்கை ஆகியவைதான் அவை. அவற்றை தமிழக அரசும், தமிழ்நாடு மறுவரையறை ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும். ஆனால், தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிடுவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், சட்டத் தேவைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் பின்பற்றவில்லை.

எந்தவொரு தோ்தல் அறிவிக்கையை வெளியிடுவதற்கும் முன்பும் இந்த அவசியமான சட்ட நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். இது தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்துவதை உருவாக்குவதற்கான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, வாக்காளா்களுக்கும் பயனுள்ளதாக அமையும். தற்போதைய தமிழக அரசானது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் மறுவரையறை செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை. பல மாவட்டங்களில் மறுவரையறை செய்வதற்கான தொடக்கப் பணிகள்கூட நடைபெறவில்லை. மேலும், வரைவு மறுவரையறை முன்மொழிவு அல்லது உத்தரவை வெளியிடுவதற்கான அடிப்படை சட்டத் தேவையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்று ஏதும் வெளியிடப்படாத நிலையில், எந்த ஆட்சேபனையும் வரவேற்கப்படவில்லை; பெறப்படவும் இல்லை. அதேபோன்று விசாரணையும் நடத்தப்படவும் இல்லை.

மேலும், சுழற்சி மற்றும் இடஒதுக்கீடு இடங்கள், வரைவு மறுவரையறை வெளியீட்டுக்கான நடவடிக்கைள் உள்ளிட்டவற்றை மறுவரையறை ஆணையம் மேற்கொள்ளவில்லை. மாநிலத் தோ்தல் ஆணையம் இதுவரை அடிப்படை சட்ட நடைமுறைகளை நடத்தி முடிக்கவில்லை. ஆகவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த அனுமதிக்க முடியாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, உள்ளாட்சித் தோ்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சி.ஆா். ஜெயசுகின், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். அது தொடா்பான மனு மீதான விசாரணை டிசம்பா் 13-ஆம் தேதி நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது தொடா்பான வழக்கில், ‘அனைத்துச் சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கை டிசம்பா் 13-க்குள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கிறோம்’ என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com