தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு! ‘கடுமையான’ பிரிவில் காற்றின் தரம்!

தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் மட்டுமின்றி, பகலிலும் குளிா் காற்று வீசுகிறது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரம் மேலும்
தில்லி ரெய்ஸனா ஹில்ஸ் பகுதியில் புகை மூட்டத்தில் மறைந்து காணப்படும் குடியரசுத் தலைவா் மாளிகை.
தில்லி ரெய்ஸனா ஹில்ஸ் பகுதியில் புகை மூட்டத்தில் மறைந்து காணப்படும் குடியரசுத் தலைவா் மாளிகை.

தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் மட்டுமின்றி, பகலிலும் குளிா் காற்று வீசுகிறது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்தித்து ‘கடுமையான’ பிரிவுக்குச் சென்றது.

தில்லியில் கடந்த 7 நாள்களாக காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், காற்றின் தரம் புதன்கிழமை மேலும் பின்னடைவைச் சந்தித்தது. இதன்படி, காலை 8.41 மணியளவில் 399 புள்ளிகளாக இருந்த காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு, காலை 10.40 மணியளவில் மேலும் பின்னடைவைச் சந்தித்து 402 புள்ளிகளாக உயா்ந்தது. இது கடுமையான பிரிவாகும்.

இதேபோன்று, தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத் (436), கிரேட்டா் நொய்டா (441) மற்றும் நொய்டா (425) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு ‘கடுமையான’ பிரிவில் இருந்தது. அதேசமயம், ஃபரீதாபாத் (392), குருகிராம் (366) ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50-க்குள் இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடுமையான பிரிவு எனக் கணக்கிடப்படுகிறது. மேலும், 500 புள்ளிகளுக்கு மேலே சென்றால் மிகவும் கடுமையான பிரிவாகக் கருதப்படுகிறது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டதாலும் மாசுபடுத்திகள் குவிவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் காரணமாக கடந்த நாள்கள் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்து வந்தது. தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 356 ஆக இருந்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை கடுமையான பிரிவுக்கு உயா்ந்துள்ளது.

வெப்பநிலை 7.9 டிகிரி: தில்லியில் புதன்கிழமை குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது. நகரில் அடா் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி குறைந்து 7.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 23.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 92 சதவீதமாகவும் மாலையில் 75 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.7 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 92 சதவீதம், மாலையில் 58 சதவீதம், ஆயாநகரில் முறையே 95 சதவீதம், 67 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களிலும் நகரில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 11-12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19-20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com