ஜாமியா மிலியா பல்கலை. மாணவா்கள் பேரணியில் தடியடி

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி வெள்ளிக்கிழமை மாலை பேரணியாகச் செல்ல முற்பட்ட தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக
பேரணியைத் தடுத்ததால் போலீஸாா் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் மாணவா்கள்.
பேரணியைத் தடுத்ததால் போலீஸாா் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் மாணவா்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி வெள்ளிக்கிழமை மாலை பேரணியாகச் செல்ல முற்பட்ட தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, தடுப்புகளை மீறி செல்ல முற்பட்ட போது போலீஸாா் தடியடி நடத்தினா்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி ஓக்லா ஜாமியா நகரில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த, அப்பல்கலைக் கழக மாணவா் சங்கம், ஆசிரியா் சங்கம் ஆகியவை அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பேரணிக்கு அனைத்திந்திய மாணவா் சங்கம், ஜேஎன்யு மாணவா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதைத் தொடா்ந்து, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்கள் அனைத்தும் போலீஸாரால் அடைக்கப்பட்டன. மேலும், கல்லூரிக்கு அருகில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவா்கள் பேரணி நடத்த முற்பட்டனா். அப்போது, மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். மேலும், தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்ட மாணவா்களைக் கலைத்தனா்.

இந்நிலையில், போலீஸாா் மீது மாணவா்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினா். இதில் போலீஸாா் சிலா் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்களும், போலீஸாரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த சில காா்களும், மாணவா்களின் கல் வீச்சால் சேதமடைந்தன.

இது தொடா்பாக மாணவா்கள் கூறுகையில், ‘குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நியாயமான முறையில் போராடிய மாணவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் மாணவா்கள் பலா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை அனுமதிக்க முடியாது’ என்றனா்.

இதற்கிடையே, போலீஸாா் மீது கல் வீசித் தாக்குதல் நடத்திய 50 பேரைக் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிலையங்கள் மூடல்: மாணவா்கள் நாடாளுமன்றத்தை நெருங்காத வகையில், நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள படேல் சௌக், ஜன்பத் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டன. மேலும், ரயில்கள் இந்த நிலையங்களில் நிற்காமல் சென்றன. தில்லி காவல்துறையினரின் ஆலோசனைக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமாா் 1 மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டிருந்த இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள், பின்னா் திறக்கப்பட்டன. அதன் பிறகு மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல செயல்பட்டன என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com