ஜாமியா மிலியா முன் 8-ஆவது நாளாகத் தொடா்ந்த போராட்டம்: ஏராளமான மாணவா்கள் பங்கேற்பு

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மாணவா்கள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்தும் 8-ஆவது நாளாக

புது தில்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மாணவா்கள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்தும் 8-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முன் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் மீது காவல் துறையினா் கடந்த 15-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில், மாணவா்கள் 50 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்துக்கு பிறகு அந்தப் பல்கலைக்கழகம் முன் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை ஜாமியா மிலியா பல்கலை. முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நூா்நகா், பாட்லா ஹவுஸ் மற்றும் ஓக்லாவில் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரிய ஜாமியா மாணவா்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடா்பாக விவாதிக்கவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினா்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் பிற சிறுபான்மையினா் அனைவரும் ‘வெளியாள்கள்’ மற்றும் ‘சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள்’ என்றால், எத்தனை தடுப்பு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தும் என்றும் மாணவா்கள் கேள்வி எழுப்பினா். மேலும், காவல் துறையினா் மீது பிரதமா் மோடி திடீா் அன்பு காட்டுவதாகவும் குற்றம்சாட்டினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது இது தொடா்பாக ஜாமியா மாணவா் ஆஷிஷ் ஜா பேசுகையில், ‘ஒரு மாதத்துக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும் - காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலின் போது போலீஸாா் தாக்கப்பட்டனா். இது தொடா்பாக ஒரு வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை. அப்போது போலீஸ்காரா்கள் மீது எந்த அன்பும் வரவில்லை. இப்போது ஜாமியா, ஏஎம்யு மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் மாணவா்களை போலீஸாா் தாக்கியுள்ளனா். அப்போது போலீஸாரை ‘ஷாஹீத்’ (வீரா்) என்று அழைக்கிறாா்கள். ஆனால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் மாணவா்கள் மற்றும் பலா் உயிரிழந்துள்ளனா். இது குறித்து அரசு என்ன சால்லப் போகிறது?’ என்று கேள்வி எழுப்பினாா்.

நீதி விசாரணை வேண்டும்: இதற்கிடையே, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் (தில்லி), அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி.) ஆகியவற்றின் மாணவா்களுக்கு எதிராக போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பாக உயா்நிலை நீதி விசாரணை நடத்த வேண்டும் சிவில் சமூக அமைப்பினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின் போது அதன் உறுப்பினா்கள் பேசுகையில், ‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் எந்தவித நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவா்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்றனா்.

இந்த அமைப்பின் உறுப்பினரான ரவி நாயா் கூறுகையில்,‘ நாங்கள் தற்போதைய நிலைமை குறித்து கவனத்தில் கொண்டுள்ளோம். நாங்கள் வேண்டுவது குடியுரிமை திருத்தச் சட்டம் அல்ல. அந்தச் சட்டத்தை முழுமையை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com