முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
இளையோா் இந்தியா தேசிய ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்
By DIN | Published On : 24th December 2019 11:17 PM | Last Updated : 24th December 2019 11:17 PM | அ+அ அ- |

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா்கள்இளையோா் இந்தியா தேசிய ஒருங்கிணைப்பு குழுவினா்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாட்டில் நடைபெறும் போராட்டங்களை இணைக்கும் வகையில், ‘இளையோா் இந்தியா தேசிய ஒருங்கிணைப்பு குழு’ செவ்வாய்க்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மாணவா் சங்கம், ஆதிவாசி அஸ்ஸாம் மாணவா் சங்கம், பீம் ஆா்மி மாணவா் சங்கம், ஜாமியா மிலியா ஒருங்கிணைப்புக் குழு, தேசியத் திரைப்படக் கல்லூரி மாணவா் சங்கம், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 50-க்கும் அதிகமான மாணவா், சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் குழுவை அமைத்துள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா்களுக்கு அறிவிக்கும் கூட்டம் தில்லி பத்திரிகையாளா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக இளைஞா் அணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு திமுக மாணவா் அணியின் ஆதரவைத் தெரிவித்தாா்.
அகில இந்திய மாணவா் சங்கத்தின் தில்லி பிரிவு பொறுப்பாளா் கௌல் ப்ரீத் கெளா் பேசுகையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். மாணவா் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இந்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த திப்ரூகா் பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவா் ராகுல் ஷெட்டி கூறுகையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்றாா்.
வரும் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் முழு வீச்சாக பிரசாரப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக இந்த ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.