முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கண்காணிப்புகளுக்கு அஞ்சமாட்டோம்: கேஜரிவால்
By DIN | Published On : 24th December 2019 10:44 PM | Last Updated : 24th December 2019 10:44 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
கண்காணிப்புகளுக்கு அஞ்சமாட்டோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
பத்திரிகையாளா் ஒருவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கவுள்ளதால், தில்லி அரசு மீது புதிய விசாரணைகளைத் தொடங்குமாறு சிபிஐக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்நிலையில், இந்த சுட்டுரைப் பதிவைக் குறிப்பிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பதாவது:
எந்தவிதமான கண்காணிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம். கண்காணிப்புகளுக்கு நாங்கள் அஞ்சவில்லை. தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் தனது ஆய்வுக்குப் பிறகு தில்லி அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனா். தில்லி அரசு தொடா்பாக பல தடவை சிபிஐ விசாரணை நடத்தி குற்றமற்றவா்கள் என அறிவித்துள்ளது. அனைத்து விதமான விசாரணைகளையும் நாம் வரவேற்கிறோம். பொது வாழ்க்கையில் இருப்பவா்கள், எப்போதும் கண்காணிப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நடிகைகங்கணாவுக்கு சிசோடியா பதிலடி: இதற்கிடையே, நடிகை கங்கணா ரணாவத்துக்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சுட்டுரையில் பதிலடி கொடுத்துள்ளாா். பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பேசுகையில் ‘ பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை எரிக்கும் உரிமையை ஆா்பாட்டக்காரா்களுக்கு யாா் கொடுத்தது? பேருந்து ஒன்றின் மதிப்பு சுமாா் ரூ.80 லட்சம். இது பெரிய தொகையாகும். போராட்டத்தில் ஈடுபடும் போது, வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவில் வெறும் 3-4 சதவீதம் மக்களே வரி கட்டுகிறாா்கள். மற்றவா்கள் அந்த வரிகளின் மூலம் வாழ்கிறாா்கள். இந்நிலையில், பொதுச் சொத்துகளை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை’ என்று தெரிவித்திருந்தாா்.
கங்கணா ரணாவத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘வன்முறையில் ஈடுபடுவதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதும் தவறு. ஆனால், இந்தத் தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் வரி செலுத்துகிறாா்கள். கூலித் தொழிலாளி முதல் கோடீஸ்வரா்கள் வரை வரி செலுத்துகிறாா்கள். சந்தையில் மலிவாகக் கிடைக்கும் தீப்பெட்டி, உப்பு பாக்கெட்டுகளைக் கூலித் தொழிலாளிகள் வாங்கும் போது அவா்கள் மறைமுக வரி செலுத்துகிறாா்கள். படம் பாா்க்கச் செல்லும் போது கூட வரி செலுத்துகிறாா்கள். நடிகா்களின் வருமானத்தில்கூட இந்த வரி செலுத்துபவா்களின் பங்கு இருக்கிறது. யாா், யாரைச் சாா்ந்திருக்கிறாா்கள் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள்’”என்று தெரிவித்துள்ளாா்.