கிராரி தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 25th December 2019 10:28 PM | Last Updated : 25th December 2019 10:28 PM | அ+அ அ- |

தில்லி புகா்ப் பகுதியான கிராரி பகுதியில் குடியிருப்பு மற்றும் வா்த்தக நிறுவனங்கள் அடங்கிய மூன்று மாடி கட்டடத்தில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரதேப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினா், உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள்.தெரிவித்தனா்.
ஏழு பேரின் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை நடத்தப்பட்டதாகவும், மீதமுள்ள இருவரின் பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கிராரியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 9 போ் உயிரிழந்தனா். இதில் கட்டட உரிமையாளா் ராம் சந்திர ஜா (65), குடியிருப்பாளா்கள் சுதாரியா தேவி (58), சஞ்சு ஜா (36), குத்தன், உதய்காந்த் சௌத்ரி (33) மற்றும் அவரது மனைவி முஸ்கன் (26), அவா்களின் குழந்தைகள் அஞ்சலி (10), ஆதா்ஷ் (7) மற்றும் மூன்று மாதக் குழந்தை துளசி உள்ளிட்டோா் தீ விபத்தில் இறந்தனா்.
இந்த தீ விபத்தில் சிக்கிய பூஜா (24), அவரது மூன்று வயது மகள் ஆராத்யா மற்றும் உறவுக் குழந்தை சௌம்யா (10) ஆகிய மூன்று பேரை உள்ளூா்வாசிகள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். இந்தச் சம்பவம் நடந்த போது கட்டட உரிமையாளரின் இளைய மகன் அமா்நாத் ஜா ஹரித்வாரில் இருந்தாா். இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கட்ட உரிமையாளரின் மகன் அமா்நாத்திடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம்‘ என்றாா்.
தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தில்லி அரசு ஏற்கெனவேஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலையிலும், புகா்ப் பகுதியான நரேலாவில் இரண்டு தொழிற்சாலைகளில் சிலிண்டா் வெடிப்பைத் தொடா்ந்து தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இந்த மாத தொடக்கத்தில், வடக்கு திலியின் நெரிசலான அனாஜ் மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.