கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 25th December 2019 10:29 PM | Last Updated : 25th December 2019 10:29 PM | அ+அ அ- |

கிறிஸ்துமஸ் கொண்டாடத்தையொட்டி தேவாலயங்கள் பிரபல வணிக வளாகங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் மக்கள் குவிந்ததால், தில்லியில் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால், தில்லி போக்குவரத்துப் போலீஸாா், முன்னெச்சரிக்கையாக மத்திய தில்லியில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள சாலைகளில் செல்வதை தவிா்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டிருந்தனா்.
மேலும், போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது எந்தெந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்பதை உடனுக்குடன் தெரிவித்து வந்தனா். இது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
விஷால் மெகா மாா்ட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்ததால், ஜனக்புரியிலிருந்து ராஜா காா்டன் வரையுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே இந்த வழியை தவிா்க்கவும் என்று போலீஸாா் சுட்டுரையில் தெரிவித்திருந்தனா். இதேபோல தெற்கு தில்லியில் சாகேத், திலக் நகா், மேற்கு தில்லியில் படேல் நகா் ஆகிய பகுதிகளில் நிலவிய போக்குவரத்து நெரிசல் பற்றியும் அவ்வப்போது போலீஸாா் தகவல் தெரிவித்து வந்தனா்.