மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க மக்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தல்
By DIN | Published On : 06th February 2019 05:33 AM | Last Updated : 06th February 2019 05:33 AM | அ+அ அ- |

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உயர் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம். மரகதம் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண்377-இன் கீழ் திங்கள்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: மகளிருக்கு மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் அரசியலமைப்பின் 108-ஆவது திருத்த மசோதா மாநிலங்களவையில் 2008, மே 6-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இரு முறை நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. இறுதியில் 2010, மே 9-ஆம் தேதி மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது. எனினும், 2014-ஆம் ஆண்டு 15 ஆவது மக்களவை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்த மசோதா காலாவதியானது.
இந்நிலையில், இந்த மசோதா 10 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்களுக்கு மாநகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும் 33 சதவீத இடங்களை 50 சதவீதமாக அதிகரிக்க வகைசெய்யும் சட்டத் திருத்தங்களை 2016-இல் நிறைவேற்றினார். எனவே, பெண்களுக்கு மாநில சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவையில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்டத்தை தாமதம் இன்றி உடனே அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோழிப்பண்ணை விவசாயிகள் நலனைப் பாதுகாக்க வேண்டும்: மக்களவையில் திங்கள்கிழமை விதி எண் 377-இன் கீழ் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் முன்வைத்த கோரிக்கை:
தமிழ்நாட்டில் மாபெரும் கோழிமுட்டை உற்பத்திக் கேந்திரமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. தினமும் சுமார் 3.40 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இருந்துதான் தமிழ்நாடு, கேரளம் முழுவதும் முட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் 800-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன்மூலம் 10 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளன.
தற்போதைய கோழி வளர்ப்புத் திட்டம் நவீன அறிவியல் ஆலோசனை, நலன் சார்ந்துள்ளது. சந்தை விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில், அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை சேமித்து வைக்க குளிர்சாதனக் கிடங்கு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்காக முட்டை வழங்குவதை 1990-இல் அறிமுகம் செய்து தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது பள்ளிகளில் ஐந்து முட்டைகள் வரை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை நாட்டின் இதர மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. கோழிப்பண்ணை விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து அவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...