அதிக உயிரிழப்புக்குக் காரணம் என்ன? மத்திய அமைச்சர் விளக்கம்

தில்லி கரோல் பாக் பகுதியில் தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில்

தில்லி கரோல் பாக் பகுதியில் தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததற்கு ஹோட்டலுக்குள் அதிக அளவு மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்ததே காரணம் என்று மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்தார்.
தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட வந்திருந்த அவர், தினமணி நிருபரிடம் கூறியதாவது: 
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு துணை நிற்கும். இந்த ஹோட்டலில் அவசர வெளியேறும் வாயில் (எமர்ஜன்ஸி கேட்) புட்டப்பட்டுள்ளது. ஹோட்டலுக்குள் அதிகளவு மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால்தான் தீ வேகமாகக் பரவியுள்ளது என நினைக்கிறேன். இதன் காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தாவுடன் பேசியுள்ளேன். இந்த ஹோட்டலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அவ்வாறு ஹோட்டலில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், ஹோட்டல் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி தீவிபத்துக்குக் காரணமானவர்களை தண்டனைக்கு உள்படுத்த தில்லி காவல் துறையைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர். 
இசை நிகழ்ச்சி ரத்து: இந்நிலையில், தில்லி அரசு ஆட்சியமைத்து நான்காவது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தில்லி இந்திரா காந்தி அரங்கில் செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தத்லானியின் இசைக் கச்சேரி நடைபெறவிருந்தது. கரோல் பாக் ஹோட்டல் தீ விபத்தைத் தொடர்ந்து, இந்த இசைநிகழ்ச்சியை ரத்துச் செய்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இசைக் கச்சேரி நடக்கும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் திவாரி கேள்வி: தீவிபத்து நடந்த இடத்துக்கு பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஹோட்டலுக்கு தில்லி அரசின் தலைமை தீயணைப்பு அதிகாரி, பாதுகாப்புச் சான்றிதழ் அளித்துள்ளார். அவசர வெளியேறும் வாயில் கூட முறையாக இல்லாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலுக்கு எந்த அடிப்படையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
ஷீலா தீட்சித் ஆறுதல்: உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தில்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் தனது சுட்டுரையில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்துள்ளவர்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக தில்லி அரசு விசாரணைக் குழு அமைத்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com