ஏழை, நடுத்தர மக்களுக்காகவே வரிச்சலுகைகள் 

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மக்களவையில், நிதி மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக, அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.
ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரையில் வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரியில் திரும்ப பெறக் கூடிய தொகையை ரூ.2500 என்பதில் இருந்து ரூ.12,500 என்று உயர்த்துவதற்கு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது. மொத்த வரியும் திரும்ப பெறப்படுவதால், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி என்பதே இருக்காது. 
ஆண்டொன்றுக்கு ரூ.8-9 லட்சம் வரையில் வருவாய் உள்ளவர்களும்கூட, முறையான வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் இந்தத் திட்டத்தின் கீழ் பலனடைய முடியும். 
இதுகுறித்து பியூஷ் கோயல் பேசுகையில், கடும் நிதி நெருக்கடியில் வாழும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவும் நோக்கத்திலேயே வரிச் சலுகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்ததைப் போல, செல்வந்தர்களுக்கான வரியை பிரதமர் மோடி அரசு ரத்து செய்யவில்லை என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளில் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பலனடைய வைக்கவே மோடி அரசு முயற்சித்தது என்றும் கோயல் குறிப்பிட்டார். தற்போது மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது இடைக்கால பட்ஜெட் ஆகும். மக்களவைத் தேர்தலுக்கு பின்பு அமையக் கூடிய புதிய அரசு சார்பில் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com