நாடாளுமன்றத்துக்குள் தவறான பாதையில் நுழைய முயன்ற எம்.பி.யின் கார்: திடீர் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தவறான பாதை வழியாக மக்களவை எம்.பி. ஒருவரின் கார் நுழைய முயன்றது  திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தவறான பாதை வழியாக மக்களவை எம்.பி. ஒருவரின் கார் நுழைய முயன்றது  திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாடாளுமன்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியே செல்ல விஜய் சௌக் பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பாதை வழியே நாடாளுமன்ற வளாகத்துக்குள் வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பாதை வழியாக, மக்களவை எம்.பி. ஒருவரின் கார் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றது. இதையடுத்து, அந்த பாதையில் உள்ள தானியங்கி தடுப்புவசதி உடனடியாக இயங்கி, காரின் முன்பகுதியை சேதப்படுத்தியது. இதனால் கார் நின்று விட்டது.
அப்போது காரில் எம்.பி. இல்லை. இதுகுறித்து காரிலிருந்த ஓட்டுநரை பிடித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தவறான பாதை வழியாக கார் ஒன்று, நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றது குறித்த தகவல் வந்ததும், அங்கு மத்திய பாதுகாப்புப் படையினர் உடனடியாக குவிக்கப்பட்டனர். கவச வாகனமும் வரவழைக்கப்பட்டது என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கார் எந்த எம்.பி.க்கு சொந்தமானது என்பது உறுதியாக தெரியவில்லை. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கு சொந்தமானது அந்த கார் என்று அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 5 பேர் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட 9 பேர் பலியாகினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள், விஜய் சௌக் பகுதி வழியாகத்தான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் நுழைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com