ராஜஸ்தான்: இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் 5ஆவது நாளாக போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கக்

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடர்ந்து 5ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஜெய்ப்பூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சாக்ஷு நகர்ப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் குஜ்ஜார் சமூகத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதேபோல, டெளஸா மாவட்டத்தில் ஆக்ரா-ஜெய்ப்பூர்-பிகானீர் தேசிய நெடுஞ்சாலையிலும், புந்தி மாவட்டம் சவாய் மாதோப்பூரில் மலர்னா சாலையில் உள்ள மாநில நெடுஞ்சாலையிலும், கரெளலி மாவட்டம் புத்லா கிராமத்தில் கரெளலி-ஹிந்தெளன் சாலையிலும் கடந்த திங்கள்கிழமை முதல் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீண்டும்  செவ்வாய்கிழமையும் அதேப்பகுதியில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் (டிஐஜி-சட்டம் ஒழுங்கு) எம்.எல்.லோதர் கூறியதாவது: கடந்த இரு தினங்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதுவரையிலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. எனவே சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார். 
மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் இரு ரயில்கள் வேறு வழித்தடத்திலும் இயக்கப்பட்டதாகவும் வட மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே, சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குஜ்ஜார் சமூகத்தினரின் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். 
குஜ்ஜார் சமூகத்தின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவின் மகன் விஜய் பைன்ஸ்லா கூறுகையில், இதுவரையிலும் மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை; எனவே, தர்னா போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். 
சவாய் மாதோபூரில் மலர்னா துங்கர் பகுதியில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள கிரோரி பைன்ஸ்லா கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com