தமிழ்நாடு இல்ல உயரதிகாரிக்கு டிடிஇஏ பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள் வாழ்த்து
By DIN | Published On : 14th February 2019 01:15 AM | Last Updated : 14th February 2019 01:15 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசின் தொழில் துறைச் செயலராக நியமிக்கப்பட்ட தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையருக்கு தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராகப் பணியாற்றி வந்த ந. முருகானந்தம், தமிழக அரசு (சென்னை) தொழில் துறையின் செயலராக சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து டிடிஇஏ செயலர் ஆர். ராஜு, டிடிஇஏ பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கூறுகையில், "தமிழ்நாடு இல்லத்தில் முதன் முதலாக தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆரம்பிக்கவும், தமிழ் மற்றும் பரதம் கற்பிக்கச் செய்யவும், இலவசமாக ஓவிய வகுப்புகளை குளிர்கால விடுமுறையில் நடத்துவதற்கும் ந. முருகானந்தம் ஏற்பாடு செய்தார். அதன்மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர்.
தமிழ்ப் பள்ளிகள் மட்டுமின்றி, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சில கல்லூரிகளில் தமிழ்த் துறை மூடும் நிலையில் உள்ளதாகக் கூறிய போது தமிழ் மாணவர்களுக்காக கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க ஆவன செய்வதற்கும் யோசனைகள் அளிக்க முன்வந்தார். இந்நிலையில், அவர் சென்னைக்கு மாற்றலாகி செல்வது தில்லிவாழ் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்' என்றார்.