டி.வி., வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்களுக்காக ரூ.2,374 கோடி செலவு: மத்திய அரசு தகவல்

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த ஐந்து

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகைகளுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின்னணு ஊடகங்களில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.470.39 கோடி செலவிடப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு இதற்காக ரூ.541.99 கோடியும், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.613.78 கோடியும் செலவிடப்பட்டது.
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் மின்னணு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.474.76 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் அதற்காக ரூ.273.54 கோடி செலவிடப்பட்டது.
இதன் மூலம், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து, 2018 டிசம்பர் மாத இறுதி வரை தொலைக்காட்சி, வானொலி, இணையதளங்களில் அரசு விளம்பரங்களுக்காக ரூ.2,374 கோடி செலவிடப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், இணையதளம், ஒலி-ஒளிக் காட்சிகள் தயாரிப்பு, வானொலி,  தொலைக்காட்சி, செல்லிடப் பேசி குறுந் தகவல்கள், திரையரங்கு விளம்பரங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டது.
இதுதவிர, வெளிப்புற விளம்பரங்களுக்காக இந்த காலகட்டத்தில் ரூ.670 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த மனுவில் பத்திரிகை விளம்பரங்களுக்கு ஆன செலவுகள் குறித்தும் சதுர்வேதி கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும், மத்திய அரசு அளித்துள்ள பதிலில், 2014-ஆம் ஆண்டிலிருந்து அரசு விளம்பரங்களுக்காக சில நாளிதழ்களுக்கு அளித்த தொகை குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. எனினும், எந்தெந்த காலகட்டத்தில் அந்தத் தொகை அளிக்கப்பட்டது, பத்திரிகை விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு ஆகிய விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. மேலும், வெளிப்புற விளம்பரங்கள் என்றால் எவையெவை என்பது குறித்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com