ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: ஷீலா தீட்சித் வலியுறுத்தல்
By DIN | Published On : 20th February 2019 06:46 AM | Last Updated : 20th February 2019 06:46 AM | அ+அ அ- |

அண்மையில் பெய்த ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் பத்ரா தலைமையிலான குழுவினர் தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஷீலா தீட்சித்தை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது, "அண்மையில் பெய்த ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை ஆம் ஆத்மி அரசு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மின்கட்டண உயர்வால் விவசாயிகள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது' என்றனர்.
அப்போது, விவசாயிகள் குழுவிடம் ஷீலா தீட்சித், "விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது. ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பான விவகாரம் குறித்து தில்லி முதல்வரையும், தில்லி துணைநிலை ஆளுநரையும் விரைவில் சந்திக்க உள்ளேன். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை விளக்கியும், அண்மையில் பெய்த ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தி தில்லி முதல்வருக்கு, துணைநிலை ஆளுநருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது' எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, அகில இந்திய கிசான் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர் ராஜ்வீர் சோலங்கி, ராம் கிரண், யுவ கிசான் தலைவர் பரஸ் சோலங்கி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.