தில்லி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

தலைநகர் தில்லியில் 2014-15 நிதியாண்டில் அரசு மருத்துவமனைகளில் 48,096 ஆக இருந்த

தலைநகர் தில்லியில் 2014-15 நிதியாண்டில் அரசு மருத்துவமனைகளில் 48,096 ஆக இருந்த படுக்கைகள் எண்ணிக்கை, கடந்த 2017-18 நிதியாண்டில் 57,194 ஆக உயர்ந்துள்ளது. தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில், 1,000 மக்கள் தொகைக்கு 2.68 படுக்கைகள் என இருந்தது, இப்போது 1,000 மக்கள்தொகைக்கு 2.99 என உயர்ந்துள்ளது. இதற்கிடையே, அம்பேத்கர் நகரில் புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 200-லிருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை ரூ.180.95 கோடி மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 
மேலும், தில்லியில் உள்ள 16 அரசு மருத்துவமனைகளை மறு சீரமைப்பு செய்யவும் ஆம் ஆத்மி அரசு தீர்மானித்துள்ளது. இந்த மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. 
இதன்படி, இந்த 16 அரசு மருத்துவமனைகளில் புதிதாக 17,000 படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 2,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான செலவினத் தொகையையும் தில்லி அரசு அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த 2007-08 நிதியாண்டில் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 861.66 கோடியாக (9.85 சதவீதம்) இருந்த செலவினத் தொகை, 2017-18-இல் ரூ.1,912.42 கோடியாக (13.289%) உயர்த்தப்பட்டுள்ளது. 
மேலும், தில்லி மக்களுக்கு வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில், ஏற்கெனவே 189 ஆம் ஆத்மி மொஹல்லா கிளிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
தில்லி சுகாதார உள்கட்டமைப்பில், மொத்தம் 1,298 மருந்தகங்கள், 1,160 மருத்துவ மையங்கள், 230 மகப்பேறு நிலையங்கள், 178 பாலிகிளிக்குகள், 88 மருத்துவமனைகள், 17 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
தில்லியைப் பொருத்தமட்டில் குழந்தைகள் இறப்பு விகிதமும் தேசிய சராசரியைவிட குறைவாகவே உள்ளன. மொத்த கருவுறுதல் விகிதமும் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. 
இதற்கிடையே, சுகாதாரத் துறையில் 2014-15-இல் ரூ.2,116 ஆக இருந்த தனிநபர் செலவினத் தொகை, 2017-18 நிதியாண்டில் ரூ.2,493 ஆக உயர்ந்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com