முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
பட்ஜெட் நிதியை சரியாக பயன்படுத்தாத தில்லி அரசு: மனோஜ் திவாரி குற்றச்சாட்டு
By DIN | Published On : 28th February 2019 05:43 AM | Last Updated : 28th February 2019 05:43 AM | அ+அ அ- |

2018-19 நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.58 ஆயிரம் கோடி நிதியை தில்லி அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு தில்லி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் கண்காட்சியின் மூன்றாவது நாள் நிகழ்வுகளை மனோஜ் திவாரி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:
தில்லி சட்டப்பேரவையில் 2019-20 நிதியாண்டு பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் எவ்வளவு நிதி மக்கள் பணிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என மக்கள் கேட்கின்றனர்.
இந்த நிதி மக்கள் நலப் பணிகளுக்காக சரிவர பயன்படுத்தப்பட்டிருந்தால், தில்லியில் போக்குவரத்து, சுகாதார வசதிகள் மேம்பட்டிருக்கும். ஆனால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தில்லி அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை. மாநகராட்சிகளுக்குச் சேர வேண்டிய நிதியை தில்லி அரசு இதுவரை ஒதுக்கவில்லை. இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் நலப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவி வந்தாலும், பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் திறம்பட மக்கள் பணியாற்றி வருகின்றன என்றார் அவர்.