முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
விமானி அபிநந்தன் நலமாக நாடு திரும்ப பிரார்த்திக்கிறேன்
By DIN | Published On : 28th February 2019 05:42 AM | Last Updated : 28th February 2019 05:42 AM | அ+அ அ- |

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான், நலமுடன் நாடு திரும்பப் பிரார்த்திப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படை வீரர்கள் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய விமானப் படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த விமானத்தின் விமானி அபிநந்தனை கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிலையில், விமானி அபிநந்தன் நலமுடன் நாடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன். இந்தியாவின் பெருமைக்குரிய மகனான அபிநந்தனை எண்ணி ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. அவர் நலமாக நாடு திரும்ப வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். நாட்டைப் பாதுகாப்பாகவும், பலமாகவும் வைத்திருக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.