சிசிடிவி, வைஃபை வசதிக்கு ரூ.650 கோடி! பட்ஜெட்டில் ஒதுக்கீடு

தலைநகர் தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், வைஃபை சேவை அளிக்கவும்  2019-20 பட்ஜெட்டில் ரூ.650 கோடி

தலைநகர் தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், வைஃபை சேவை அளிக்கவும்  2019-20 பட்ஜெட்டில் ரூ.650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்ள் தொடர்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தற்போது பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் கேஜரிவால் கூறுகையில், "தில்லியில் வைஃபை வசதி அளிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் இதற்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக பல்வேறு மாதிரிகள் ஆய்வு செய்து புதியவற்றை கொண்டு வர முயற்சி  செய்கிறோம்.  தில்லியில் தற்போது ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன'  என்றார்.
இதற்கிடையே, தில்லியில் அடுத்த ஆண்டு முதல் வைஃபை சேவை தொடங்கப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வைஃபை வசதி அளிக்கப்ப்டுகிறது. இது தொடர்பாக பல்வேறு மாதிரிகள் ஆராயப்பட்டன. இந்த நிலையில், தில்லியில் வைஃபை சேவையை அடுத்த ஆண்டு முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோன்று தேர்தல் வாக்குறுதிப்படி, ஆம் ஆத்மி அரசு தில்லியில் குடிசைப் பகுதிகள், பெரிய காலனிகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 
இதற்காக 2019-20 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 2,000 கேமராக்கள் என்ற வீதத்தில் மொத்தம் 1.4 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,  துணை நிலை ஆளுநர் தேவையில்லாத வகையில் தலையிட்டதால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.  கடந்த ஆண்டு குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக பொருத்த உத்தரவிட்டேன். 
ஆனால், துணை நிலை ஆளுநரின் தலையீடு காரணமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.  இருந்தாலும் இப்போது இந்தத் திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சிசோடியா. இது குறித்து பின்னர் கேஜரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தில்லியில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் ஒன்றுக்கு மட்டும்தான் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 
கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களை வேலைபார்க்க விடாமல் தில்லி துணை நிலை ஆளுநர் தடைகளை ஏற்படுத்தினார்.  சிசிடிவி கேமரா திட்டம் தொடர்பான கோப்புக்கு அனுமதி அளிக்கக் கோரி  மணீஷ் சிசோடியா, துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ந்து 10 நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதால்தான் ஒப்புதல் கிடைத்துள்ளது ' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com