புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதிக்கு ஏற்ப ஊக்கத் தொகை: அமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளமிக்க மாநிலங்களுக்கு  ஏற்றுமதிக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளமிக்க மாநிலங்களுக்கு  ஏற்றுமதிக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை  அமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மாநாடு மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் குருகிராமில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட  பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
தமிழக அரசு சார்பில் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான விக்ரம் கபூர், எரிசக்தித் துறை செயலாளர் முகமது நசிமுதீன்,  தமிழ்நாடு மின்சார வாரிய இணை இயக்குநர் பி. முத்தையா (தில்லி) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணியின் உரை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனல் மின் நிலையங்களின் தடையற்ற மின் உற்பத்திக்கும், மத்திய மின் ஆணையத்தின் விதிகளின்படி 30 நாள்களுக்கு குறைவில்லாமல் நிலக்கரி கையிருப்பு வைக்கவும், மார்ச் முதல் ஆகஸ்ட்  வரையிலான நிலக்கரி தேவைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் (20 ரயில்வே தொடர் வண்டிகள்) ஒதுக்கீடு செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு மத்திய மின் துறை அமைச்சகம் பரிந்துரைக்க வேண்டும். 
மேலும், 2020- 21 முதல் 2021- 22ஆம் ஆண்டு வரையில்  மின் திட்டங்களுக்கு தற்காலிகமாக  நிலக்கரி வழங்குவதற்கு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தித் திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டுவர ஒப்புதல் அளித்து நிலக்கரி தேவையை  பூர்த்தி செய்ய  மந்தாகினி மற்றும் உத்கல் நிலக்கரி தொகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
தமிழகத்தில் கஜா புயலால் பல்வேறு மாவட்டங்களில் மின் கட்டமைப்பு பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.  அவற்றைச் சீரமைக்கும் பொருட்டு, அந்த மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த மின் மேம்பாடு  (ஐபிடிஎஸ்)  மற்றும்  தீனதயாள் உபாத்யாய கிராம மின்னொளி திட்டம் ஆகியவற்றின் மூலம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப்  பணியை நிறைவு செய்ய குறைந்தது 6 மாத  காலம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியை முழுமையாக வெளிக் கொணர்ந்து பயன்படுத்துகிறது. 
அதனால், அனல் மின்நிலையங்களை குறைவான திறனுடன்  இயக்க வேண்டிய நிலை உள்ளதுடன்,  மத்திய மின் நிலையங்களுக்கு  கூடுதல் இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. 
இது போன்ற சூழலில்,  மாநில மின் பகிர்மான கழகங்கள் மீது மின் தொடரமைப்புக் கட்டணங்கள் சுமத்தப்படுவதால், கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளமிக்க மாநிலங்களின் நலனைப் பாதுகாக்கவும், நிதி நிலைமையை முறைப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மின் தொடரமைப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்குத்  தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். 
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளமிக்க மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கரி சுரங்கங்களுக்கு  வழங்கப்படும் ஆதாய உரிமைத் தொகையைப் போல, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதிக்கு ஏற்றவாறு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளமிக்க மாநிலங்களுக்கு ஆதாய உரிமைத் தொகை அல்லது ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com